கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு ஆணை வழங்கல்

கடையநல்லூர், நவ. 20:   கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 29 ஆயிரம் குடியிருப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே 13 ஆயிரத்து 971 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கருப்பாநதி அணை குடிநீர் திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற்று நகராட்சி பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்பும் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனையடுத்து நேற்று நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் புதிய குடிநீர் இணைப்புக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது: கடையநல்லூர் நகராட்சி சார்பில் புதிதாக சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்கு மேல் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான குடிநீர் இருப்பு உள்ளது. இதுவரை ஆயிரத்து 500 பயனாளிகள் பணம் கட்டியுள்ளனர். நகரில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும், என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் நாராயணன், உதவி பொறியாளர் முரளி, மேலாளர் முகம்மது யூசுப், நகரமைப்பு ஆய்வாளர் ஜின்னா, சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, அதிமுக மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் மைதீன், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரபிரசாத், துணை செயலாளர் வெங்கடநடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>