×

தெள்ளார் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வந்தவாசி, நவ.13: தெள்ளார் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சரை ஊராட்சியில் பல்லவன் நகர் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையின்பேரில் கடந்த  2017ம் ஆண்டு ₹6 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் அமைக்கும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து, ஏரியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பல்லவன் நகர் நீர்த்தேக்க தொட்டிக்கு ஊராட்சி நிதியில் இருந்து ₹1.50 லட்சம் மதிப்பில் பைப்லைன் அமைக்கப்பட்டது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ₹1.90 லட்சம் மதிப்பில் பைப்லைன் அமைத்தனர்.

இதற்காக ₹9.40 லட்சம் வரை செலவு செய்தும், இதுவரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி விநியோகம் செய்யவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் முயற்சி கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடந்தது. சோதனை ஓட்டம் செய்யும்போதே நீர் மூழ்கி மோட்டார் பழுதானது. இதனால் அந்த மின்மோட்டார் தற்போது அனாதையாக கிடக்கிறது. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தண்ணீர் ஏற்றப்படாமல் உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்கள், வேறு பைப்லைன் பதித்தால்தான் அதற்கான தொகையை வழங்குவோம் என கூறிய பின்னரும், ஒப்பந்ததாரர் ஒரே அளவிலான பைப்பை பதித்தார். அதன் பிறகு இயக்க முயன்றபோது ஆழ்துளையில் இருந்த மின் மோட்டார் பழுதானது. பழுதை நீக்கி பொருத்தலாம் என்றால் தற்போது ஏரியில் தண்ணீர் உள்ளது என காரணம் காட்டி ஊராட்சி செயலாளர்  மின் மோட்டார்  பழுதை நீக்க கடந்த 2 மாதங்களாக முன்வரவில்லை.

கோடையின் போது தண்ணீர் கொண்டு வர ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றனர். தற்போது மழை பெய்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும், தண்ணீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் மீண்டும் செல்ல வேண்டியுள்ளதே என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, பொதுமக்கள் நலன் கருதி ₹10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thendi ,
× RELATED மண்புழு உரங்களை பயன்படுத்தினால் நிலத்தின் வளங்களை அதிகப்படுத்தலாம்