×

நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயக்கழிவு நீர் கலப்பதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு

கரூர்,நவ.7: திருப்பூர் சாயக்கழிவு கலப்பு பிரச்சனைக்கு அரசு தீர்வு காணாததால் மீண்டும் சாயக்கழிவுநீர் கலந்துவருகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் நொய்யலில் காவிரியில் கலக்கிறது நொய்யல் ஆறு, நொய்யல் ஆறு வாய்க்கால் திட்டம் தீட்டப்பட்டு, ஒரத்துப்பாளையம், சின்னமுத்தூர், ஆத்துப்பாளையத்தில் அணைகள் கட்டப்பட்டன.முத்தூர் கதவணையில் இருந்து ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரும்வகையில் 9கிமீ தூரத்திற்கு இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட்டது. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து 57கிமீ தூரத்திற்கு நொய்யல் கால்வாய் வெட்டப்பட்டது. 19ஆயிரத்து 600ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.நொய்யல் ஆற்றில் திருப்பூர்சாயக்கழிவு நீர் கலக்க தொடங்கியதில் இருந்து விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. நிலம் உவர்நிலமாக மாறியதுடன், கிணறுகளில் சாயக்கழிவு கலந்துநீர்கெட்டுபோனது. ஒரத்துப்பாளையம் அணை என்பது சாயக்கழிவு நீரை தேக்கி வைக்கும் அணையாக மாறிவிட்டது.

எப்போதெல்லாம் மழைபெய்கிறதோ அப்போதெல்லாம் சாயக்கழிவுநீரை திறந்துவிடுவது வாடிக்கையாக நடந்துவருகிறது. சுற்றுச்சூழல் அமைச்சராக கருப்பண்ணன் வந்தபின்னர் அதிக அளவு கழிவுநீர் கலக்கப்படுகிறது. திருப்பூர் சாயக்கழிவு நீரை திறந்துவிடுவோருக்கு ஆதரவாக அமைச்சர் செயல்படுவதே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் நொய்யல் ஆற்றில் வருவது சாயக்கழிவுநீர் அல்ல சோப்பு நுரை என அமைச்சரே கூறியது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தென்மேற்கு பருவ மழையின்போது உப்புத் தன்மை அளவு குறைந்திருந்ததால் அதனை பயன்படுத்த விவசாயிகள் முடிவுசெய்தனர். முத்தூர் கதவணை அடிக்கப்பட்டு ஆத்துப்பாளையம் அணைக்கு நீர்வந்தது. வாய்க்கால்கள் தூர்ந்துபோய்கிடந்ததால் அவை தூர் வாரப்பட்டது. எனினும் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் மழைபெய்து வருவதால் மழைநீருடன் சாயக்கழிவு கலந்து வருகிறது.மீண்டும் நொய்யல் ஆற்றில் திருப்பூர்சாயக்கழிவு நீரை திறந்துவிட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்.பலமுயற்சிகள் எடுத்து தண்ணீரை கொண்டுவந்து விவசாயம் செய்ய முனைந்த போது மீண்டும் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் ஆற்றுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியவில்லை. கிணற்றுநீரும், ஆழ்துளை கிணற்று நீரும் மாசடைந்து விட்டது. ஒவ்வொருமுறை தண்ணீர் திறக்கப்படும்போது இப்படித்தான் நடைபெறுகிறது. தமிழக அரசு ஒவ்வொரு முறையும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.இவர்கள் எல்லாம் எதற்காக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என தெரியவில்லை. ஒன்று இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அல்லது விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆவண செய்யவேண்டும் என்றனர்.

Tags : river ,Tirupur ,Noyal ,
× RELATED பாசன வாய்க்கால் சீரமைக்க...