×

தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் அவலம் பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் கும்பல்

கள்ளக்குறிச்சி, நவ. 7: தியாகதுருகம் புக்குளம் பஸ்நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபடும் ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ அழகுவேலுபாபு தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிழற்குடை முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆக்கிரமித்து கொண்டு 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மினி டெம்போ ஓட்டுநர்களும், பூக்கடை மற்றும் பழக்கடை வியாபாரிகளும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு செல்ல பேருந்தை எதிர்பார்த்து இந்த பயணியர் நிழற்குடையில் காத்திருக்கும்போது, சில ஆட்டோ டிரைவர்கள் மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சில நேரங்களில் சில்மிஷம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனை பள்ளி மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் நிழற்குடை பகுதிக்கு செல்ல அச்சப்பட்டு சாலையின் ஓரமாக பஸ் வரும்வரை வெகு நேரம் காத்திருந்து வீட்டு செல்கின்றனர். எனவே பயணியர் நிழற்குடை பகுதியில் மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோ, மினி டெம்போக்களை அங்கிருந்து வெளியேற்றி மாற்று இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிழற்குடை பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளையும் அகற்ற தியாகதுருகம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தியாகதுருகம் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவிகளை குறிவைத்து கேலி கிண்டல் செய்யும் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி நேரம் முடியும் மாலை நேரங்களில் புக்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Tags : Thiyakathurugam Pukkulam ,bus stop ,gang ,
× RELATED 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல்...