×

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல்

சேலம், நவ.6: தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு தினக்கூலியை ₹380 என உயர்த்தி வழங்க வேண்டும். கேங்மேன் பணியிடம் நிரப்பும்போது, முன்னுரிமை அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு அப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை உதவியாளர் நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று, மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தினர். சேலத்தில், உடையாப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லதம்பி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் செய்தவர்களை அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில், மாவட்ட தலைவர் நல்லதம்பி உள்பட 131 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தனியார் திருமணமண்டபத்திற்கு கொண்டுச் சென்று தங்க வைத்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Electricity contract workers ,
× RELATED மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி...