×

பரவை பேரூராட்சியில் கருவேலங் காடான பெரிய கண்மாய்

வாடிப்பட்டி. நவ. 6: பரவை பேரூராட்சியில் கருவேலாங்காடாக மாறிய பெரிய கண்மாயின், நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்ததால், 10 ஆண்டாக நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. கண்மாயை தூர்வாரி நீர்தேக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பரவை பேரூராட்சி. இங்குள்ள பெரிய கண்மாய், 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய் மூலம் 2500 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. வாழை, கொடிக்கால் மற்றும் நெல் பயிரிட்டு வந்தனர். பரவை பேரூராட்சியின் குடிநீர் பிரச்னையும் தீர்த்து வைத்தது. இக்கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தொடக்க காலத்தில் பரவையை ஒட்டியுள்ள வைகை ஆற்றுக் கால்வாயிலிருந்து நேரடியாக கண்மாய்க்கு தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

நாளடைவில் வைகை ஆறு பள்ளமானதால் கண்மாய்க்கு தண்ணீர் வருவது தடைபட்டது. பின், சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கண்மாயில், முல்லையாற்று கால்வாய் மூலம் நீர் நிரப்பி, அக்கண்மாய் நிரம்பியவுடன், அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பரவை கண்மாயில் நிரம்பி வந்தது.
ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், வரத்துக் கால்வாய் தூர்ந்து பரவை பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வருவது நின்றது. இதனால், 10 ஆண்டுகளாக கண்மாய் வறண்டு கிடக்கிறது. ஆட்சியாளர்கள் நீர்நிலையை பராமரிக்காததால், தற்போது பெரிய கண்மாய் கருவேலங்காடாக மாறியுள்ளது. தொடர் மழை பெய்தால் சிறு குளமாக காட்சியளிக்கிறது. கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வந்த விளைநிலங்கள் தற்போது தரிசு நிலங்களாகவும், விலைநிலங்களாகவும் மாறி வருகிறது.

இது குறித்து பரவை சமூக ஆர்வலர் சவுந்திரபாண்டியன் கூறுகையில், ‘ பரவை கண்மாயை தூர்வாரி நீர்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏவான அமைச்சர் செல்லூர்ராஜூ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் 10க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால், நடவடிக்கை இல்லை. கண்மாயினை தூர்வாரி நீர்தேக்க நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி விவசாய நிலங்கள் பயன்பெறும்’ என்றார்.

Tags : forest ,Karuvelang ,Paravur Baruratchi ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...