×

குடியாத்தம் நகராட்சி பள்ளி பின்புறம் குட்டை போல் தேங்கி கிடக்கும் கால்வாய் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

குடியாத்தம், நவ. 6: குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பின்புறம் சுண்ணாம்புபேட்டை, திருமலை கார்டன் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியின் குடியிருப்பு அருகில் உள்ள கால்வாயில் மழைநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இதில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுநீரில் புழுக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வப்போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் மாணவர்கள், குழந்தைகள் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் விளையாட செல்லும் போது, நீரில் மூழ்கி விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Guttatam Municipal School ,
× RELATED ₹1.66 கோடியில் சிறுபாலம் அமைக்க கலெக்டர்...