ஏற்காடு அருகே மழையால் சேதமடைந்த மண்சாலையால் அவதி

ஏற்காடு, நவ.5: ஏற்காடு அருகே மழையால் சேதமடைந்த மண்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.  ஏற்காடு தாலுகா, மாரமங்கலம் பஞ்சாயத்தில் மேல் கோவிலூர் மற்றும் தாழ் கோவிலூர் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கூத்துமுத்தல் கிராமம் வழியாக 7 கி.மீ தூரத்திற்கு மண்பாதை வழியாக இந்த செல்ல வேண்டும். தற்போது, ஏற்காட்டில் பெய்து வரும் மழையினால் கோவிலூர் செல்லும் மண்சாலையில் பல இடங்களில் சரிவு ஏற்பட்டு, பாறைகள் சரிந்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோவிலூர் கிராமம், ஏற்காட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என கோவிலூர் கிராம மக்கள் நேற்று ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது: வாணியாறு காப்புக்காட்டில் உள்ள தாழ் கோவிலூர், மேல் கோவிலூர் கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் மண்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலை அடித்து சென்றுவிட்டது. இதனால், கிராம மக்கள் எங்கேயும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் செல்லும் ஒரு வழிப்பாதையிலும் ஆறு ஓடுவதால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. எனவே, கூத்துமுத்தல் முதல் கோவிலூர் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வரை 8 கி.மீ சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட துணை பிடிஓ மகேந்திரன் கோவிலூரில் பாதிப்புகளை பார்வையிட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Avadi ,sandstone ,Yercaud ,
× RELATED பொதுமக்கள் அவதி