×

265 ஊராட்சிகளில் 60 லட்சம் மர விதைகள் விதைக்கப்படவுள்ளது

திருப்பூர், நவ.5:திருப்பூரில், 265 ஊராட்சிகளில் மொத்தம் 60 லட்சம் நாட்டு மர விதைகளுக்கு மேல் விதைக்கப்படவுள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த விதைப்பந்து திருவிழாவில் மர விதைகளை  ஊராட்சிகளுக்கு கலெக்டர் வழங்கி பேசியதாவது, மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ், 13 வட்டாரத்திற்குட்பட்ட, 265 ஊராட்சிகளில், தோராயமாக 25,000 விதைகள் வீதம் மொத்தம் சுமார் 60 லட்சம் விதைகளுக்கு மேல் விதைக்கப்படவுள்ளது.

இதில், சுமார் 50 சதவீதம் விழுக்காடு முளைத்து வரும். அதில் ஊராட்சிக்கு 10,000 மரங்கள் உருவாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மர விதைகள் விதைக்கப்படவுள்ளது. இதில் வேங்கை, வேம்பு, வாகை, தேக்கு, நீர்மருது, தான்றி, மலைவேம்பு, குமிழ், பூச்சைக்காய், ஆச்சான், புங்கன், பூவரசு, புளி, இலுப்பை, கொடுக்காப்புளி, நெல்லி, நாவல் மற்றும் அத்தி ஆகிய மரங்களும் இத்துடன் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 14 கிலோ விதையுடன், ஈரப்பதத்தினை நிலை நிறுத்த நுண்ணுயிரிகள் 3 கிலோ மற்றும் தேங்காய் நார் 10 கிலோ வழங்கப்படுகிறது.
மேலும், இதில் கடின மரங்களும், பறவைகளுக்கான பழங்கள் தரும் மரங்களும், தேனிக்களை ஈர்க்கும், பூக்கள் உதிர்க்கும் மரங்களும் உள்ளன. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் நல்ல முறையில் மர விதைகளை விதைத்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர பேசினார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்