×

மதுரை அரசு மருத்துவமனையில் முதுகலை பயிற்சி டாக்டர்கள் பணி புறக்கணிப்பு

மதுரை, நவ. 1: அரசு டாக்டர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், மதுரையில் முதுகலை மருத்துவம் படித்து வரும் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து நேற்று திடீர் போராட்டத்தில் இறங்கியதால், சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.தமிழ்நாடு அரசு முதுகலை மருத்துவம் படித்து வரும் பயிற்சி டாக்டர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து, நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுகலை மாணவர்களை கவுன்சலிங் நடத்தி நியமனம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீட்டுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 9 மணியளவில் 120க்கும் அதிக பயிற்சி டாக்டர்கள் மருத்துவமனையின் டீன் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சங்குமணி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த திடீர் போராட்டத்தால் வார்டுகளில் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. உள் நோயாளிகளுடன், வெளிநோயாளிகளும் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அறிவொளி கூறியதாவது: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஏற்கனவே போராட்டம் அறிவித்திருந்தனர். சென்னை, விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மட்டும் தீவிரம் காட்டப்படவில்லை. காரணம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 60 பேரை இடமாற்றம் செய்துள்ளனர். 80 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில்தான் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டத்தை வாபஸ் வாங்கி இருக்கிறது. வாபஸ் பெறப்பட்டதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்காக அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீதான நடவடிக்கையை தவிர்க்க வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழகத்தில் அரசு டாக்டர்கள் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 5 ஆயிரம் டாக்டர்களே போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கின்றனர். மீதி 13 ஆயிரம் டாக்டர்களும் தொடர் போராட்டத்தில்தான் இருக்கிறோம். எங்களில் யாரும் பணிக்கு செல்லவில்லை. நாங்கள் தொடர்ந்து பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம். அனைத்து இடங்களிலும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துறை அமைச்சர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்த திடீர் போராட்டத்தால், சிகிச்சை கிடைக்காமல் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் நேற்று பெரும் அவதிக்கு ஆளாகினர்.

Tags : Postgraduate Doctors ,Madurai Government Hospital ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...