×

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து இயக்கப்படும் அமரர் ஊர்திகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து, தினமும் அதிக எண்ணிக்கையில் வெளியூர்களுக்கு உடல்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளதால், அமரர் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கான மருத்துவ மையமாக மதுரை அரசு மருத்துவமனை விளங்கி வருகிறது. தினமும் நோய் பாதிப்பு மட்டுமின்றி, விபத்து, தற்கொலை, கொலை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 40க்கும் மேற்பட்டோரின் உடல்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கென தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் பெறும் நிலையில், தமிழ்நாடு அரசு இலவச அமரர் ஊர்திகளை ஏழை எளியோருக்காக இயக்கி வருகிறது. இந்த ஊர்திகள் ஏழை மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 18 அமரர் ஊர்திகள் இருந்தன. காலப்போக்கில் இவற்றின் எண்ணிக்கை குறையத்தொடங்கி 6 வாகனங்களாாக மாறியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த சிறப்பு நடவடிக்கையால், தற்போது 10 அமரர் ஊர்திகள் செயல்பாட்டிற்கு வந்தன. இவற்றில் ஒரு அமரர் ஊர்தி உசிலம்பட்டி மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில், தற்போது 9 அமரர் ஊர்திகள் இருக்கின்றன. தினமும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தோர் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில், தற்போதைய 9 அமரர் ஊர்திகள் பற்றாக்குறையாகவே இருக்கிறது. எனவே, மதுரை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, ‘‘மதுரையில் இருக்கும் 9 அமரர் ஊர்திகளில், ஒன்று அண்ணா பஸ்ஸ்டாண்ட் மருத்துவமனை பகுதியிலிருந்து, கோரிப்பாளையம் மருத்துவமனை பிணவறை பகுதிக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே மீதமுள்ள 8 அமரர் ஊர்திகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வாங்கிய 4 ஊர்திகள் தொலைதூர நகரங்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பயன்படுத்தப்பட்ட பின், அமரர் ஊர்தியாக மாற்றப்பட்ட மீதமுள்ள 4 ஊர்திகள் அருகாமையில் உள்ள ஊர்களுக்கும் இயக்கப்படுகிறது. பொதுவாக மதுரை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை என்பது மிக குறைவாகவே உள்ளது. ஆனால் கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்டவற்றால் சிகிச்சைக்கு வந்து பலியாவோர் எண்ணிக்கை என்பது தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்றவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பின் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலையில், அமரர் ஊர்திகளின் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் அமரர் ஊர்திகள் இல்லை என்று கூறுவதை ஏற்காமல், உயிரிழந்தோரின் உறவினர்கள் தகராறு செய்கின்றனர். அவர்களை போலீசார் உதவியுடன் நாங்கள் சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன்பிறகும் அவர்கள் கட்டணம் செலுத்தும் தனியார் வாகனங்களில் உடல்களை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பின்னர் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ஒரு உடலை கொண்டு சென்றுதிரும்பிய அரசு அமரர் ஊர்தியில் உடனடியாக அடுத்த உடலை ஏற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது வாகனத்தின் டிரைவருக்கும் ஓய்வெடுக்க முடியாத சூழலை உருவாக்குகிறது.

எனவே சிறப்பு நடவடிக்கையாக அரசு தரப்பில் மதுரை அரசு மருத்துமவனைக்கு கூடுதல் எண்ணிக்கையில் அமரர் ஊர்திகள் வழங்கிட வேண்டும். மேலும் இங்கு அமரர் ஊர்திகளை இயக்க இருக்கும் டிரைவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்’’ என்றனர்.

குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்..
மதுரை மாவட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளை அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும், சிகிச்சை முடிந்து மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கவும், 102 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ்கள் மதுரை அரசு மருத்துவமனையில் 6 மற்றும் திருமங்கலம், உசிலம்பட்டி மருத்துவமனைகளில் தலா ஒன்று என மொத்தம் 8 என்ற எண்ணிக்கையில் இருந்தன. தற்போது பழுது, பயன்படுத்த முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை தற்போது 3 என குறைந்துள்ளது. எனவே பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து இயக்கப்படும் அமரர் ஊர்திகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Government Hospital ,Madurai ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு