×

ஆலத்தூர் அடுத்த தெரணியில் கல் குவாரி ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

பாடாலூர், நவ.1: ஆலத்தூர் தாலுகா தெரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல் குவாரிகளை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் உள்ளன. இந்நிலையில் தெரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள கல் குவாரிகளுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கல் குவாரிகள் உள்ள பகுதியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் வீடுகளாக உள்ளன. மேலும் கல் குவாரிகள் தொடங்கவுள்ள மலைப் பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளது. அப்பகுதியில் விவசாய நிலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கொட்டகை அமைத்து பசு மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.

இதனால் மலைகளில் கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடிகள் வைக்கும் போது கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படுகிறது. மேலும் விவசாய நிலங்களில் வளர்த்து வரும் மாடுகள், ஆடுகள் மீது கற்கள் விழுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் கொட்டகை சேதமடைவதுடன் ஆடு, மாடுகள் மீது கற்கள் விழுந்தால் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கல் குவாரியை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பாடாலூர் -கொளக்காநத்தம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தெரிவித்தனர்.தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சிறில்சுதன், விஏஓ நல்லுசாமி மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் இதற்கு முன்பு ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து 2 முறை சாலை மறியல் நடந்தது குறிப்பிடத்தக்கது.




Tags : auction ,protest ,stone quarry ,Alathoor ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...