×

செய்யாறு அருகே பரபரப்பு தென்எலப்பாக்கம் ஏரி மதகில் திடீர் விரிசல்

செய்யாறு, நவ.1: செய்யாறு அருகே தென் எலப்பாக்கம் ஏரி மதகில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், வருவாய் மற்றும் பொதுப்பணித்தறை அதிகாரிகள் 250 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நீர் கசிவை தடுத்து நிறுத்தினர்.செய்யாறு  தாலுகா அனக்காவூர் ஒன்றியம் தென்எலப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியானது 250 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் 19 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் 10  அடிக்கு நீர்வரத்து உள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதகு பகுதியில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்தனர்.

அதன்பேரில், தாசில்தார் மூர்த்தி, உதவி செயற்பொறியாளர் காளித்திரியன் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் 250 மணல் மூட்டைகளை விரிசல்  ஏற்பட்ட பகுதியில் அடுக்கி நீர் கசிவதை தடுத்து நிறுத்தினர். அப்போது, மண்டல துணை தாசில்தார் என்.கோபால், தேத்துறை வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, விஏஓ கீர்த்திவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.ஏரி மதகில் திடீரென விரிசல்  ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Lake Madagkam ,
× RELATED சப்- இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார்...