ஆரல்வாய்மொழி அருகே கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் பாய்ந்த காரில் இருந்து 2 வயது குழந்தை, தாத்தா உயிருடன் மீட்பு

ஆரல்வாய்மொழி, அக்.31 : ஆரல்வாய்மொழி அருகே கார் குளத்துக்குள் பாய்ந்தது. அதில் இருந்த 2 வயது குழந்தையும், தாத்தாவும் வாலிபர் ஒருவரால் உயிருடன் மீட்கப்பட்டனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (51). தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், சுபா என்ற மகளும் உள்ளனர். சுபா திருமணமாகி, தனது கணவர் மதனுடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரதிக்ஷா (2) என்ற மகள் உள்ளார். மதன், ஈரோட்டில் ரயில்வே இன்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் மதன், ஊருக்கு வந்திருந்தார். ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த மருமகன் மதனை அழைத்து வருவதற்காக பாக்யராஜ் தனது காரில் ஆரல்வாய்மொழி புறப்பட்டார். அப்போது பேத்தி பிரதிக்ஷாவும் வருவதாக அழுததால், அவரையும் காரில் ஏற்றிக் ெகாண்டு ஆரல்வாய்மொழி நோக்கி வந்து கொண்டு இருந்தார். செண்பகராமன்புதூர் -  ஆரல்வாய்மொழி சாலையில் உள்ள கட்டளைக்குளம் அருகே கார் வந்து ெகாண்டு இருந்தது. அப்போது காரின் முன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றவாறு குழந்தை பிரதிக்ஷா விளையாடிக் கொண்டு இருந்தாள். காரின் முன் பக்க கண்ணாடி திறந்து இருந்ததால், குழந்தை தடுமாறி விழக்கூடாது என்பதற்காக குழந்தையையும் அவ்வப்போது கையால் பிடித்துக் கொண்டு பாக்யராஜ் காரை ஓட்டி வந்தார். கட்டளைகுளம் ரோட்டில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, குளத்துக்குள் பாய்ந்தது.

சிறிது நேரத்தில் கார் தண்ணீரில் மூழ்கியது. அந்த சமயத்தில் காருக்கு, பின்னால் செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் மணிகண்டன் (26) என்பவர் மினி டெம்போவில் வந்து கொண்டு இருந்தார். கார் குளத்துக்குள் பாய்ந்து மூழ்கியதை பார்த்ததும் அவர் கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அந்த சமயத்தில், காருக்குள் இருந்து வெளியே வந்த பாக்யராஜ், குழந்தை பிரதிக்ஷாவை கையில் தூக்கிக்கொண்டு கூச்சலிட்டார். இதை பார்த்ததும் மணிகண்டன் உடனடியாக குளத்துக்குள் பாய்ந்து, பிரதிக்ஷாவை மீட்டு வெளியே கொண்டு வந்தார். பின்னர் பாக்யராஜையும் மீட்டு வெளியே அழைத்து வந்தார். ஏற்கனவே பாக்யராஜுக்கு நீச்சல் தெரியும் என்பதால், உடனடியாக குழந்ைதயை கையால் தூக்கி காப்பாற்றி அபாய குரல் எழுப்பினார். இந்த விபத்தில் பாக்யராஜ் மற்றும் அவரது பேத்தி பிரதிக்ஷா இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டனர். தோவாளை தாசில்தார் ராஜேஸ்வரி, ஆரல்வாய்மொழி போலீசாரும் வந்தனர். பின்னர் முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரம், முன்னாள் வார்டு உறுப்பினர் தேவதாஸ் மற்றும் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் இணைந்து கயிறு கட்டி, கிரேன் மூலம் காரை வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிகண்டன் மட்டும் சரியான நேரத்தில் கவனிக்காமல் இருந்திருந்தால், கார் குளத்துக்குள் மூழ்கியதே தெரியாமல் போய் இருக்கும் என அந்த பகுதி பொதுமக்கள் கூறினர். காப்பாற்றியவரை கட்டி தழுவி கதறிய குடும்பத்தினர்

குளத்துக்குள் இருந்து மீட்கப்பட்டதும், பாக்யராஜ் தனது பேத்தியையும், தன்னையையும் காப்பாற்றிய  மணிகண்டனை கட்டி தழுவி கதறினார். உன்னை என் வாழ்நாளில் நான் மறக்க முடியாது என கூறிய அவர் ஒரு கட்டத்தில் காலில் விழ போனார். அதை தடுத்த மணிகண்டன் அவருக்கு ஆறுதல் கூறினார்.

விபத்து பற்றி அறிந்ததும் சம்பவம் இடத்துக்கு வந்த பாக்யராஜின் குடும்பத்தினரும் மணிகண்டனுக்கு நன்றி கூறி கண் கலங்கியது உருக்கமாக இருந்தது. இது குறித்து பாக்யராஜ் கூறுகையில், எனது பேத்தி பிரக்திஷா, காரின் முன் இருக்கையில் நின்று கொண்டு விளையாடியவாறு இருந்தாள். திடீரென நின்றவாறே கண் அயர்ந்து தூங்கினாள். அவள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக நான் பிடிக்க முயன்ற போது, கார் தடுமாறி குளத்தில் பாய்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், எனது பேத்தியை கையில் பிடித்துக் கொண்டு நீந்தியவாறு கூச்சலிட்டேன். அந்த சமயத்தில் மணிகண்டன் சரியான நேரத்தில் தண்ணீருக்குள் பாய்ந்து பேத்தியையும், என்னையும் மீட்டார். எங்கள் குலத்ைதயே காப்பாற்றி விட்டார். அவர் மட்டும் அங்கு வராமல் இருந்திருந்தால், எங்கள் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மணிகண்டனை எங்களை காப்பாற்றிய கடவுளாக பார்க்கிறோம் என்றார்.

தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி வருகின்றன. கட்டளைகுளமும் நிரம்பும் தருவாயில் உள்ளது. குளம் நிரம்பினால் சாலை மட்டத்துக்கு தண்ணீர் இருக்கும். பைக்கில் செல்லும் போது காற்றில் தண்ணீர் தெளிக்கும். அந்தளவுக்கு குளம் நிரம்பி காட்சி தரும் நிலையில் உள்ளது. கடந்த 2 வருடத்துக்கு முன், குளம் நிரம்பி சாலை துண்டிக்கப்பட்ட போது மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றார். ஆனால் அந்த பணி நடக்க வில்லை. இந்த குளம் அமைந்துள்ள சாலை நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலை ஆகும். ஆரல்வாய்மொழி - திருவனந்தபுரம் மாற்று சாலையும் இது தான். குளம் ஊராட்சிக்கு உட்பட்டு வருகிறது. இரவில் தெரு விளக்குகள் கிடையாது. கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் அதிகம் செல்லும் பகுதி ஆகும். எனவே இனியாவது தடுப்பு சுவர் அல்லது கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

கொட்டும் மழையிலும் உதவிய இளைஞர்கள்  குளத்துக்குள் மூழ்கிய காரை மீட்கும் பணியில் அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் தீவிரம் காட்டினர். ஆரல்வாய்மொழியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி காரை வெளியே எடுத்தனர். மீட்பு பணி நடந்த சமயத்தில் பலத்த மழை இருந்தது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல், இளைஞர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தை தான் என் கண்ணுக்கு தெரிந்ததுமணிகண்டன் கூறுகையில், நான் மாடுகளை ஏற்றிக் கொண்டு மினி டெம்போவில் வந்தேன். எனக்கு முன்னால் கார் சென்றதை கவனித்தேன். திடீரென அந்த கார் தாறுமாறாக ஓடி குளத்துக்குள் விழுந்தது. நான் டெம்போவை நிறுத்தி விட்டு கூச்சலிட்டவாறு ஓடி வந்தேன். அந்த சமயத்தில் திடீரென குழந்தையை கையில் தூக்கி கொண்டு பாக்யராஜ் அலறினார். அதை பார்த்ததும் எதையும் பற்றி யோசிக்காமல் குளத்துக்குள் பாய்ந்தேன். அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பது  மட்டும் எனக்குள் இருந்தது என்றார்

Related Stories:

>