×

கடல் நீர்மட்டம் குறைவு,தொடர் மழை கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

கன்னியாகுமரி, அக்.31 : கன்னியாகுமரியில் நேற்று கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக  திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.  சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினசரி உள்ளூர், வெளியூர்,  வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இப்படி வருகின்றவர்கள் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்,  திருவள்ளுவர் சிலையை சென்று பார்த்து ரசிக்கின்றனர். இதற்காக பூம்புகார்  கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை நடத்தி வருகிறது.  தினமும்  காலை 8 முதல் மாலை 5 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக  ஏராளமானோர் வந்தனர். ஆனால் இங்கு காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதால்  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.  இந்த நிலையில் நேற்று  கடலில் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக கடல் நீர்மட்டம் நிலையாக இல்லை. இதனால் தண்ணீருக்குள் இருக்கும் பாறைகள் வெளியே  தெரிந்தன. இதனால் நேற்று முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்தாலும்,  இங்கு வடமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். படகு சேவை  நடக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ேமலும் கடல்  சீற்றம் காரணமாக ஆரோக்கியபுரம் முதல் மேலமணக்குடி வரை நாட்டு படகு  மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே சின்னமுட்டம்  விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் நிலையில், நாட்டு படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை  ஏற்பட்டிருப்பது மீன் பிரியர்களை கவலையடைய செய்தது.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...