×

வண்டியூர் மாரியம்மன் கோயில் பெயர் மாற்றம் செய்ய வழக்கு

மதுரை, அக். 25: வண்டியூர் மாரியம்மன் கோயில் என பெயர் பலகையை மாற்றம் செய்வது குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, வண்டியூரைச் சேர்ந்த துரைப்பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வண்டியூர் 400 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான கிராமமாகும். தற்போது மதுரை மாநகராட்சியில் உள்ளது. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், இங்கு நடக்கும் தெப்பத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. பல வரலாற்று ஆவணங்கள் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் என உள்ளது. கடந்த 1890ல் எடுக்கப்பட்ட போட்டோவில் கூட வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் ேதாண்டப்பட்டபோது எடுக்கப்பட்ட முக்குறுணி விநாயகர் சிலை தற்போது மீனாட்சியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அதில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தோண்டும் போது கிடைத்தது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்கும் போது, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் என்று தற்போது கோயில் நுழைவு வாயிலில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டியூரின் பழமையான வரலாறு அழியும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வண்டியூர் என்பதை நீக்கி பெயர் பலகை வைப்பது பழமையான வரலாற்றை அழிப்பதாகும்.எனவே, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் என்று வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை மாற்றம் செய்து வண்டியூர் மாரியம்மன் கோயில் என வைத்திடவும், பழமையான வண்டியூரின் வரலாற்று இயற்பெயர் தொடர்ந்து நீடித்திடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கோரிக்கை குறித்து வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில் மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் 3 வாரத்திற்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Tags : renaming ,Vandiyoor Mariamman Temple ,
× RELATED வண்டியூர் மாரியம்மன் கோயிலில்...