×

திருநகர் காலனியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 24:ஈரோடு திருநகர் காலனியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை (எண்: 3505) செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் பார் இல்லாத நிலையில் கடைக்கு வரும் குடிமகன்கள் மதுவை வாங்கிக் கொண்டு ரோட்டிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பள்ளி மாணவ, மாணவியரும், பெண்களும் இந்த ரோடு வழியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையில் (எண்: 3481) ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த டாஸ்மாக் கடைக்கு இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடையை பூட்டி விட்டனர். ஆனால், ஏற்கனவே பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை  இதே பகுதியில் கொண்டு வர முடிவு செய்து புதிதாக கடையும் கட்டி உள்ளனர். நேற்று இந்த கடையை திறப்பதற்காக மதுபானங்களை இறக்கி உள்ளனர். இதைக்கண்டித்து அப் பகுதி வணிகர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சண்முகவேல், திமுக முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திரன், தமிழர் கழக நிறுவன தலைவர் தமிழ்ச்செல்வன், பஞ்சமி நிலமீட்பு கூட்டமைப்பு வழக்கறிஞர் அய்யப்பன் உள்பட பல்வேறு அமைப்பினர் நேற்று கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டாஸ்மாக் உதவி மேலாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இந்த பிரச்னை தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கடையை திறக்க மாட்டோம் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Protests ,opening ,Task Shop ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்