×

நகராட்சி சுகாதார ஆய்வாளர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் : தாம்பரம் ஆர்டிஓவிடம் மனு

தாம்பரம்: தமிழ்நாடு நகராட்சிகளின் சுகாதார  ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், தேர்தல் பணியில்  இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபரியும் எங்களுக்கு தொடர்ந்து தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், எங்களுடைய முதன்மை பணிகளான டெங்கு நோய் தடுப்பு பணிகள், துப்புரவு பணிகள், உரிமம் வழங்குதல் தொடர்பான ஆய்வு பணி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சான்று வழங்குதல், தூய்மை இந்தியா திட்டப்பணி போன்றவை பாதிக்கப்படுகிறது.

மேலும், தொற்று நோய் தடுப்பு பணிகள், பொதுமக்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை, குடிநீர் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு, மக்கும் குப்பை கொண்டு உரம் தயாரித்தல், உரம் விற்பனை செய்தல், மக்காத குப்பையினை சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்புதல், அனிமேட்டர்களின் பணியினை ஆய்வு செய்தல் போன்ற பணிகளும் பாதிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான பணிகள் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது, பணிச்சுமை அதிகமாகி எந்த பணியினையும் சரிவர செய்திட இயலவில்லை. தேர்தல் பணிகளையும் முழுமையாக செய்து முடிக்க இயலவில்லை. ஊரக பகுதிகளில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தேர்தல் பணி ஏதும் ஒதுக்கீடு செய்வதில்லை. பொது சுகாதார பணியின் அவசியம் கருதி, எங்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : health inspectors ,Tambaram RTO ,
× RELATED கொரோனா காலத்தில் தேர்தல் பிரச்சாரம்...