×

உழைப்பாளிகள் நிறைந்த நாங்குநேரி தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்யும் கட்சி அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

களக்காடு, அக். 17: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும், அவர்களது வழியில் தற்போதும் அதிமுக பொதுமக்கள் விரும்பும் வகையில்தான் செயல்படும். மக்களுக்கு தேவையானதை செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து களக்காடு ஒன்றிய பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வீடு, வீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர் களக்காடு ஒன்றியம் மீனவன்குளம் கிராமத்தில் கொட்டும் மழையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது: நாங்குநேரி தொகுதி  உழைப்பாளிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. உழைப்பாளிகள் விரும்பும் கட்சியான அதிமுக நிச்சயம் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பாடுபடும். 2 நாட்களாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன்பிறகு நாங்குநேரி தொகுதியில் மிகப்பெரிய மாற்றங்கள் எழுந்துள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். கூட்டணி கட்சி தோழர்களும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. குறிப்பாக கிராமங்களில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது.  கடந்த 3 ஆண்டுகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 முறையாவது சென்று வந்திருப்பார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் 4 முறை தமிழக முதல்வர் சென்று வந்துள்ளார்.

தற்போது எல்லாம் மாவட்டத்திற்கும் சென்று அரசின் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வரின் மக்கள் நலன்சார்ந்த செயல்பாடுகளை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர். தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களோடு மக்களாகத்தான் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழக முதல்வர், துணை முதல்வர் பிரசாரத்துக்கு வரும்போது எந்த ஒரு சிறப்பு ஏற்பாடுகளும் நாங்கள் செய்வதில்லை. புதிதாக ரோடு போடுவதில்லை. இருக்கும் ரோட்டில்தான் மக்களோடு மக்களாக வந்து வாக்கு சேகரித்து செல்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும், அவர்களது வழியில் தற்போதும் அதிமுக பொதுமக்கள் விரும்பும் வகையில்தான் செயல்படும். மக்களுக்கு தேவையானதை செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. நாங்கள் எதிர்க்கட்சிகளைப் போல் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுவதில்லை.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : KD Rajendrapalaji ,Party ,working class ,
× RELATED நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் இல்லை என அவரது தரப்பினர் விளக்கம்