×

திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர், அக். 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்
3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ்(32). இவரது மனைவி ஜோதி. கடந்த 11ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு ஜோதி பெண்ணைவலத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மாலை சிவராஜ் தன் மனைவியை அழைத்து வருவதற்காக மாமனாரின் வீட்டிற்கு சென்றார்.அப்போது ஜோதியின் உறவினருக்கும், சிவராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் ஜோதியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சிவராஜை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து தன் வீட்டிற்கு திரும்பி வந்த சிவராஜ் மீண்டும் மறுநாள் 12ம் தேதி அதிகாலை பெண்ணைவலம் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பொக்லைன் இயந்திரம் ஜோதியின் உறவினருக்கு சொந்தமானது என்று நினைத்துக்கொண்டு அதை அடித்து உடைத்துள்ளார்.

இதையடுத்து பொக்லைன் இயந்திரத்திற்கு சொந்தமான அதே ஊரைச்சேர்ந்த கலிய பெருமாள் மகன் அப்பாஸ், பெருமாள் மகன்கள் ஏழுமலை, வீரமுத்து, தனக்கோட்டி மனைவி ஜெயந்தி, ஏழுமலை மனைவி காவேரி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சிவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சிவராஜின் அண்ணன் மகன் பார்த்திபன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி கொலை வழக்கு பதிவு செய்து அப்பாஸ், ஏழுமலை, வீரமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

Tags : persons ,youth murder ,Thiruvennainallur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை...