×

சடலத்துடன் சாலை மறியல் எதிரொலி வீ.ராமநாதபுரத்தில் தற்காலிக மயான வசதிக்கு ஏற்பாடு

கெங்கவல்லி, அக்.16: 30 ஆண்டுகளாக மயான வசதி கேட்டு போராடி வந்த வீ.ராமநாதபுரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து நிலம் அளவீடு செய்தனர். மேலும், தற்காலிக மயான வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட வீ.ராமநாதபுரம் கிராமத்தில் மயான வசதியின்றி சடலங்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலநிலை தொடர்ந்தது. மயானம் கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் பெண் சடலத்துடன் சாலை மறியலில் குதித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், பிரச்னை குறித்து நேற்று சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று கெங்கவல்லி தாசில்தார், சர்வேயர் மற்றும் வருவாய் ஆய்வாளர் விசாரித்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் மயானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும், தகுதியான இடத்தை கண்டறிந்து சர்வே செய்து கல் நட்டு விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து மயானம் அமைப்பதற்கு நிதியுதவி பெற்று விரைந்து பணிகளை முடித்து தருவதாக வீரகனூர் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் உறுதி அளித்துள்ளார். இருப்பினும் தற்சமயம் மழைக்காலம் என்பதால், அவசரகால நிதி பெற்று, எரியும் சடலங்கள் மழையில் நனைந்து விடாதவாறு இருப்பதற்காக தற்காலிகமாக ஒரு தகன மேடை அமைத்து கொடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஓரிரு தினங்களில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார்.

Tags : picketing facility ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...