×

குமரியில் மழைக்கு மேலும் 2 வீடுகள் இடிந்தன தாய், மகன் உயிர் தப்பினர்

நாகர்கோவில், அக்.16:   குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நேற்று மேலும் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று அதிகாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழையும் காணப்பட்டது. பலத்த காற்றும் வீசியது. நேற்று காலை வரை அதிகபட்சமாக நாகர்கோவிலில் 29 மி.மீ மழை பதிவாகி இருந்தது. களியலில் 17, குழித்துறை 16.4, ஆரல்வாய்மொழி 13, குருந்தன்கோடு 14.6, முள்ளங்கினாவிளை 15 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.90 அடியாக இருந்தது. அணைக்கு 165 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணை மூடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 68.95 அடியாக உள்ளது. அணைக்கு 214 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1ல் 12.43 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. சிற்றார்-2ல் 12.53 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 11.70 அடியும், மாம்பழத்துறையாறில் 54.12 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 14.60 அடியாகும்.
இதற்கிடையே நாகர்கோவிலில் பெய்த கன மழையின் காரணமாக நாகர்கோவில், வடசேரி, பயோனியர் தெருவில் மணி என்பவரின் ஓட்டு வீடு சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மீனாட்சி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை போன்று தோவாளை பகுதியிலும் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

Tags : homes ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...