மஞ்சூர், அக்.4: கேத்தி, கீழ்குந்தா பேரூராட்சி பகுதிகளில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா கேத்தி சி.எஸ்.ஐ கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவிபொறியாளர் பெருமாள்சாமி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி வளாகம் மற்றும் எல்லநள்ளி உள்பட பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தானர்.
இதேபோல் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் கரியமலை தொடக்கப்பள்ளி, மின்வாரிய முகாம் தொடக்கப்பள்ளி, கீழ்குந்தா நடுநிலைப்பள்ளி உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜா, குடிநீர் பொருத்துனர் பிரகாஷ், மேற்பார்வையாளர் செல்வன் மற்றும் பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.