×

கனியாமூர் நீர்த்தேக்கத்தை சீரமைத்த மக்கள்

சின்னசேலம், அக். 4: சின்னசேலம் அருகே சேதமடைந்த நீர்த்தேக்கத்தை சீரமைக்க கோரி பொதுப்பணி துறையினரிடம் மனு கொடுத்தும் சீரமைக்காததால், விவசாயிகளும் பொதுமக்களும்  சேர்ந்து சீரமைத்தனர்.சின்னசேலம் அருகே கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கல்லாநத்தம் பகுதியில்  இருந்து மயூரா நதி உற்பத்தியாகிறது. இந்த நதி பெரிதாக இல்லாவிட்டாலும் மழை காலத்தில் நல்ல நீரோட்டம் இருக்கும். இதனால் தகரை, பாண்டியங்குப்பம், கனியாமூர், பெத்தானூர், தென்செருவள்ளூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கனியாமூர் கூட்ரோடு அருகே மயூரா நதியின் குறுக்கே இந்த பகுதி விவசாயிகளின் நலன்கருதி பெரிய தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளின் நீர்மட்டம் குறையாமல் இருந்து வந்தது. விவசாயிகளும் நல்லமுறையில் விவசாயம் செய்து வந்தனர். கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது வந்தது. இந்தநிலையில் இந்த நீர்த்தேக்கம் பழுதடைந்து ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் வரும் நீர் இந்த தடுப்பணையில் தேங்கி நிற்காமல் உடைப்புகளின் வழியே வழிந்தோடி விடுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தி  இப்பகுதியை சேர்ந்த கல்வியாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் சேர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் மனு கொடுத்து பல நாட்களாகியும் பொதுப்பணித்துறை இந்த தடுப்பணையை சீரமைக்க முன்வரவில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பாசன கால்வாய்கள், மதகுகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவை குடிமராமத்து பணியின்மூலம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நீர்த்தேக்கத்தை மட்டும் சீரமைக்க பொதுப்பணித்துறை முன்வரவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்குள் இந்த தடுப்பணையை சீரமைத்தால்தான் உண்டு. ஆற்றில் நீர் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால், அதிருப்தி
யடைந்த விவசாயிகள் சொந்தசெலவில் தடுப்பணையை சீரமைக்க முடிவு செய்தனர்.இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த கல்வியாளர் ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் சொந்தசெலவில் சிமெண்ட், மணல் வாங்கி 10 பணியாளர்களை கொண்டு தடுப்பணையை சீரமைத்தனர். மேலும் அதிக நீரை தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணை உயரத்தை சமப்படுத்தியும் கட்டினர். இதையடுத்து இனிவரும் காலங்களில் இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் இப்பகுதியில் குடிமராமத்து பணி என்பது கேள்விக்குறியாக மாறி, மக்களுக்கு எவ்விதத்திலும் பயனில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Tags : Kaniyamur ,reservoir ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...