×

தோகைமலை ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பு கிராமசபை கூட்டம்

தோகைமலை, அக். 4: தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளில் நடந்த காந்தி ஜெயந்தி சிறப்பு கிராமசபை கூட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் கேட்டும், பேரூரில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 150வது காந்தி ஜெயந்தி சிறப்பு கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் தனித்தனியே நடந்தது. கழுகூர் ஊராட்சி எ.உடையாப்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பத்மா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகானந்தம் 14 தீர்மானங்களை வாசித்தார். கூடலூர் ஊராட்சி பேரூர் மாரியம்மன் கோயில் அருகே நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய பணியாளர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் போதுமணி தீர்மானங்கள் வாசித்தார். ஆர்டிமலை ஊராட்சி அழகாபுரி அரசு துவக்க பள்ளி அருகே நடந்த கிராமசபை கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் மாலதி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார்.

கள்ளையில் ஒன்றிய அலுவலர் சிவகாமி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் மாணிக்கம் தீர்மானங்கள் வாசித்தார். வடசேரியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் கலியராஜ் தீர்மானங்கள் வாசித்தார். தோகைமலை வருந்திபட்டி அரசு துவக்கப்பள்ளி அருகே நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய பணியாளர் இந்திராணி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் இளங்கோவன் தீர்மானங்கள் வாசித்தார். சின்னையம்பாளையத்தில் ஒன்றிய பணியாளர் கல்பனாதேவி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் நேசமணி தீர்மானங்கள் வாசித்தார்.இதேபோல் ஆர்ச்சம்பட்டியில் ஒன்றிய பணியாளர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் தினேஷ் தீர்மானங்கள் வாசித்தார். புழுதேரியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய பணியாளர் கபூர் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் மணிவேல் தீர்மானங்களை வாசித்தார். கல்லடை கீழவெளியூரில் சாலை ஆய்வாளர் விஜயராணி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ் தீர்மானங்கள் வாசித்தார். ஆலத்தூரில் ரமேஷ்பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வரதராஜன் தீர்மானங்கள் வாசித்தார். இதேபோல் பில்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய பணியாளர் அஞ்சலிதேவி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் தீர்மானங்கள் வாசித்தார்.

மேலும் சேப்ளாப்பட்டி, பாதிரிபட்டி, பொருந்தலூர், முதலைபட்டி, நெய்தலூர் உள்பட 20 ஊராட்களில் நடந்த கூட்டங்களில் குடிநீர் கேட்டு பெரும்பாலான கிராமங்களில் கோரிக்கை மனு அளித்தனர்.. இதேபோல் கூடலூர், ஊராட்சி பேரூரில் செயல்ப்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை மூடவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வை செய்தார்.


Tags : meeting ,Gandhi Jayanti Festival Special Grama Sabha ,panchayats ,
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...