×

குமுளூர் ஆதிதிராவிடர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி உண்ணாவிரத போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்தது

லால்குடி, அக்.1: லால்குடி அருகே குமுளூர் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் குமுளூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய குழு அந்தோணிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் மற்றும் செபஸ்தியான், அன்பரசன், வினோத் ஏசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு நடராஜன், சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில்
குமுளூர் ஊராட்சியில் அந்தோணியார் கோவில்தெரு, சவேரியார் தெரு மாரியம்மன் கோவில் தெரு மற்றும் ஆதிதிராவிட தெருவை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணறு மூலம் வழங்கப்படும் குடிநீர் செம்மண் கலரில் வருவதால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் மேல்நீர்தேக்க தொட்டியில் இருந்து குமுளூரை சேர்ந்த ஒரு பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை இந்த பகுதி மக்களுக்கும் வழங்கிட வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அந்தோணியார் கோவில்தெரு மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். தேரடி வீதியில் இருந்து சூலை வரை குமுளூர்-சங்கேந்தி வரை செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.

தொடர்ந்து மின்சாரம் தடைபடுவதால் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து தரவேண்டும். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலையில் இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாத்திட ஏரியை தூர்வாரி கரையை அகலப்படுத்தி பலப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் குமுளூர் கிராம மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, புள்ளம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் யோலா, வருவாய் ஆய்வாளர் அப்துல்கரீம், சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் அமைதிபேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குமுளூர் ஆதிதிராவிடர் பகுதி மக்களுக்கு மூன்று தினங்களுக்குள் கொள்ளிட கூட்டு குடிநீர் வழங்குவது. தொடரும் மின் பற்றாக்குறையை போக்க ஒரு மாதத்திற்குள் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து தருவது. மேலும் ஆதிதிராவிடர்கள், சிறுபான்மையினருக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது, உடனடியாக 100 நாள் வேலை வழங்குவது என அதிகாரிகள் உறுதியளித்தன்பேரில் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

Tags : hunger strike ,Communist Party of India (Marxist) ,Kumloor Adivasi ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் இன்று திமுக உண்ணாவிரத போராட்டம்