×

அரசு பேருந்தை மக்கள் சிறைபிடிப்பு

விழுப்புரம், அக். 1: விழுப்புரம் அருகே சோழகனூர் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பொதுமக்கள் பேருந்தினை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே சோழகனூர் ஊராட்சியில் அரசு தொகுப்பு வீடுகள், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து, அக்கிராம ஊராட்சி செயலாளர் மீது பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சோழகனூர் கிராம பொதுமக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆசாரங்குப்பத்திலிருந்து அவ்வழியாக விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் கூலி வழங்கப்பட்டதாகக்கூறி பொதுமக்கள் பணத்தை ஊராட்சி செயலாளர் முறைகேடு செய்துள்ளார். 30 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் கணக்கு எழுதி வைத்து அந்த நிதியை முறைகேடு செய்துள்ளார். இதற்கான தகவல்களை ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெறப்பட்டு தகுந்த ஆதாரங்களை வைத்துள்ளோம். மேலும், வீடு கட்டி முடித்தவர்களுக்கு பில் தொகை வழங்காமல் மோசடி செய்து வருகிறார். இதுகுறித்து பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் இதனை ஏற்க மறுத்து, துறை அதிகாரிகள் வரவேண்டுமென கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், கோலியனூர் துணை பிடிஓ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு பின் பேருந்து விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Tags : state bus people ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை