×

மற்ற கல்லூரிகளுக்கு முன்னுதாரணமாக கோவை அரசு கலைக்கல்லூரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை

கோவை, செப்.30:  பிளாஸ்டிக் பைகளில் துவங்கி, பேனா, டம்ளர், மாணவர்கள் அணியும் அடையாள அட்டை வரை அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்து 100 சதவீத பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கல்லூரியாக கோவை அரசு கலைக்கல்லூரி உள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே பிளாஸ்டிக் பொருள் உபயோகத்தை குறைக்க தொடங்கி விட்டது கோவை அரசு கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து தற்போது 100 சதவீதம் பிளாஸ்டி பயன்பாடில்லாத, மற்ற கல்லூரிகளுக்கு ‘ரோல் மாடல்’ கல்லூரியாக மாறியிருக்கிறது கோவை அரசு கலைக்கல்லூரி.

 ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமல்லாது அதேபோல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும்  ‘பால் பாயிண்ட்’ பேனாக்கள் துவங்கி, பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பிளாஸ்டிக் அடையாள அடையாள அட்டை என பிளாஸ்டிக்கின் ஒட்டுமொத்த அவதாரங்களுக்கும் இக்கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடி உத்தரவாக பிறப்பிக்காமல் மாணவர்கள் மத்தியில் படிப்படியாக இதனை அமல்படுத்தி சாதித்துள்ளனர் கல்லூரி பேராசிரியர்கள். இதுகுறித்து கோவை அரசு கலைக்கல்லூரியின் பொருளாதார துறை பேராசிரியரும், பிளாஸ்டிக் ஒழிப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளருமான வசந்தி கூறியதாவது: எங்கள் கல்லூரியில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிட்டியில் தற்போது 35 பேராசிரியர்களும், தேசிய மாணவர்படையை சேர்ந்த  104 மாணவர்களும் உள்ளனர். கமிட்டி உருவாக்கப்பட்டதில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்புக்கு படிப்படியான நடவடிக்கைகளை எடுத்து வந்தோம்.

அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வண்ணம் கோவை அரசு கலைக்கல்லூரி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கல்லூரி என்று சுவர் ஓவியங்கள் வரைந்தோம். தொடர்ந்து, மனித சங்கிலி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தினோம்.  ரோட்டரி கிளப் உதவியுடன் இலவச துணிப்பைகளை தயாரித்து பேராசிரியர்களுக்கும், மாணவர்களும் வினியோகிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கல்லூரி உணவகத்தில் துணிப்பைகளால் மட்டுமே பார்சல் செய்ய உத்தரவிடப்பட்டது. வகுப்பறைகளில் பிளாஸ்டி டம்ளர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக சில்வர் டம்ளர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 பிளக்ஸ் பேனர்களும் பிளாஸ்டிக் போலவே எளிதில் மக்காத பொருள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி, துணியில் பெயிண்ட் செய்து கல்லூரி நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்த அறிவுறுத்தினோம். தற்போது எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில்லை. மாற்றாக துணிகளால் தயாரிக்கப்பட்ட விளம்பர போர்டுகளே பயன்படுத்தப்பட்டு  வருகின்றன.

 கல்லூரியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் சூழலில், அவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் ‘பால் பாயிண்ட்’ பேனாக்கள் தடை செய்ய கல்லூரி முதல்வர் சுற்றரிக்கை அனுப்பினார். மாதத்திற்கு சுமார் 6 ஆயிரம் பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை குறைக்கவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். அந்த கட்டுரையின் முகப்பு பகுதிகளிலும், உட்பகுதிகளிலும் பிளாஸ்டி தாள்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதற்கு பதிலாக பழைய முறைப்படி பைண்டிங் செய்து ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்தாண்டு முதல் மாணவர்களின் அடையாள அட்டையையும் பிளாஸ்டிக்காக இருக்கக்கூடாது என்று கமிட்டி மற்றும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கெட்டியான காகிதத்தால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவண்குமார் ஜடாவத் எங்கள் கல்லூரியை மற்ற கல்லூரிகளின் ‘ரோல்மாடல்’ என்று புகழாரம் சூட்டினார். பிளாஸ்டி ஒழிப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பதை அராய்ந்து தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவோம்.  இவ்வாறு வசந்தி கூறினார்.

Tags : colleges ,Government of Goa ,art galleries ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...