×

வாய்க்காலை தூர்வாராததால் நீர்வரத்து தடைபட்ட அய்யனார் கோயில் ஏரி

ஆத்தூர்,  செப்.26: வரத்து வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாராமல்,  ஏரியில் மட்டும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதால், சமீபத்தில் கனமழை பெய்தும், அய்யனார் கோயில் ஏரிக்கு மழைநீர் வரவில்லை என விவசாயிகள் புகார்  தெரிவித்துள்ளனர். ஆத்தூர் நகராட்சியில் உள்ள அய்யனார்  கோயில் ஏரியில் தூர்வாரும் பணிகளை, குடிமராமத்து திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை நீர்பாசன அதிகாரிகள், ஏரி  பாசன விவசாய சங்கத்தினரை கொண்டு மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, ஆத்தூர் சுற்றுவட்டார  பகுதிகள் மற்றும் கல்வராயன் மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆனால், அய்யனார் கோயில் ஏரிக்கு மட்டும் நீர்வில்லை.

இதுகுறித்து அய்யனார்  கோயில் ஏரி பாசன விவசாயிகள் கூறியதாவது: குடிமராமத்து பணி திட்டத்தின்  கீழ், அய்யனார் கோயில் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நீர் வரத்து  வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறும் என  நினைத்தோம். ஆனால் ஏரியின் உட்புறத்தில் உள்ள கிராவல் மண்ணை வெட்டி எடுத்து, கரையில் கொட்டப்படுகிறது. கல்வராயன் மலை வரத்து வாய்க்கால்  மற்றும் காட்டாறு ஓடையில் எந்த பணியும் செய்யவில்லை. இதனால், அய்யனார் கோயில் ஏரிக்கு  தண்ணீர் வரவில்லை. ஆனால், புது ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் வரும் வாய்க்காலை  சீர்படுத்தும் பணியை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்த வாய்க்கால்  ஏற்கனவே, அந்த பகுதி விவசாயிகளால் சீர்செய்யப்பட்டது.  பாசன விவசாயிகளின்  பெயரில் நிதி முறைகேட்டில் ஈடுபடும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். வரத்து  வாய்க்காலை தூர்வாரி சீரமைத்திருந்தால்,  தற்போது பெய்த மழைக்கு ஏரியில்  நீர் நிரம்பி இருக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து  பணிகளை கண்காணித்து, முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : koil lake ,Ayyanar ,season ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு