×

கோமுகி அணை நீர்மட்டம் 30.3 அடியாக உயர்வு

சின்னசேலம், செப். 26: கல்வராயன்மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொட்டியம், கல்பொடை ஆறுகளில் இருந்து 275 கனஅடி நீர்வரத்தால் கோமுகி அணையின் நீர்மட்டம் 30.3 அடியாக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கல்வராயன்மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் ஒரு பகுதியை கச்சிராயபாளையம், வடக்கநந்தல் ஏரிகளுக்கும், மற்றொரு கால்வாயின் மூலம் கடத்தூர், தெங்கியாநத்தம், நல்லாத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் செல்கிறது. இதன்மூலம் கோமுகி ஆற்றுநீர் 40 ஏரிகளுக்கு சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும், கல்வராயன்மலையில் அதிக மழை பொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் பருவமழை தவறியதன் விளைவால் கடந்த ஆண்டு அணையில் போதிய அளவு நீர் சேமித்து வைக்க முடியாமல் அணை வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து உள்ளது. அதைப்போல கல்வராயன்மலையில் இருந்து கோமுகி அணைக்கு நீர்வரத்து இருக்கும் கல்பொடை, பொட்டியம் ஆறுகளில் இருந்தும் தற்போது 275 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் 30.3 அடியாக உயர்ந்துள்ளது. இதைப்போல இன்னும் ஓரிரு வாரங்களில் கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்து வந்தால் கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த மாதம்வரை வறண்டு கிடந்த கோமுகி அணை தற்போது 30.3 அடிநீர் மட்டத்தை எட்டியுள்ளதை எண்ணி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அணை நிரம்ப 15 அடிநீர் தேவை என்பதாலும், மழை பெய்து வருவதால் அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Gomukhi Dam ,
× RELATED கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு