×

விமான ஓடுதளத்தில் தார்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியது விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் வேலூர் விமான நிலையத்தில் கட்டிட பணிகளை தொடர்ந்து

வேலூர், செப்.26:வேலூர் விமான நிலையத்தில் கட்டிட பணிகளை தொடர்ந்து ஓடுதளத்தில் தார்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் போக்குவரத்துக்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக விமான நிலையம் வசம் உள்ள 52 ஏக்கர் நிலத்துடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் 68 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் விமான நிலையத்தை மேம்படுத்தி சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக 800 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதேபோல் பயணிகள் ஓய்வறை, உணவகம், பாதுகாப்பு, சோதனை முனையம் அடங்கிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. விமானங்கள் வந்து இறங்கி செல்ல வசதியாக நடமாடும் சிக்னல் மையமும் தயார் நிலையில் உள்ளது.இதற்கிடையில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்த சாலையில் போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்படவில்லை. இந்த சாலைக்கு பதிலாக விமான நிலையத்தின் இடதுபுறம் சாலை அமைக்கப்பட்டு, அந்த சாலையுடன் இணைக்கப்படுகிறது.

தற்போது சாலை ஒரே நேர்கோட்டில் செல்கிறது. தற்போது அமைக்கப்பட உள்ள சாலை விமான நிலையத்தை சுற்றி வரும். புதிய சாலை அமைப்பதற்காக ₹1.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய கேட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அந்த சாலையை விமான நிலையத்துக்கு ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள தொடர் காலதாமதம் விமான நிலைய பணிகளை திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து செயல்பாட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், 441 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை கூடுதலாக விரிவாக்கம் செய்யும் பணியும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது விமான நிலைய ஓடுதளத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் ஓடுதளம் பாதை 815 மீட்டர் நீளமும், சுமார் 80 அடி அகலத்திற்கு ரன்வேயில் தார்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சென்சார் கருவி மூலம் ஓடுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்தளம் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. ஓடுபாதையில் தார்தளம் உயரம் அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெர்மினல் கட்டிடத்திற்கான பணிகளும் 70 சதவீதம் முடிந்துள்ளது.

Tags : Vellore airport ,runway ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...