×

ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி

சென்னை: ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் பாரிஸில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 2.05 மணிக்கு சென்னையில் இருந்து பாரிஸ் புறப்பட்டு செல்லும். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே அந்த விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. மீண்டும் இந்த விமானத்தில் 308 பயணிகள் பாரிஸ் செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

விமானி விமானத்தை ஓடுபாதையில் இயக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து, உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து விமான இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, இயந்திர கோளாறால் பழுதடைந்து நின்ற விமானத்தை இழுத்துக் கொண்டு வந்து விமானங்கள் நிற்கும் பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து விமான பொறியாளர்கள் குழு விமானத்துக்குள் ஏறி பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் விமானம் பழுது பார்க்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று காலை 7 மணி வரையில் விமானம் பழுதுபார்க்கும் பணி முடிவடையாததால் விமானம் நேற்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  பயணிகள் அனைவரும் சென்னை நகரில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து விமானம் பழுதுபார்க்கப்பட்டு இன்று பாரிஸ் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் சென்னையில் தவித்து வருகின்றனர்.

The post ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Air France ,CHENNAI ,Air France Airlines ,Paris ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...