×

மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

 தர்மபுரி, செப்.25: தர்மபுரியில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவு முழுவதும் தூங்க முடியாமல மக்கள் அவதிப்பட்டனர்.தர்மபுரி மாவட்டத்தில் மழையின்றி கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. ஏரி, குளம், கிணறு மற்றும் நீர்நிலைகள் வறண்டன. நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் தர்மபுரி-பென்னாகரம் சாலை ஏஎஸ்டிசி நகர், ஆவின்நகர், நந்தி நகர், அன்னை சத்ய நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி- பென்னாகரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையை பணிகள் மேற்கொள்ளும் போது அருகிலிருந்த நீர்வழி பாதை மூடப்பட்டுள்ளது. இப்பகுதி மழைநீர் மற்றும் கழிவு நீர் அனைத்தும் இந்த நீர்வழி பாதை வழியாகச் சென்று ஏரியில் கலக்கிறது. இதன் காரணமாக நள்ளிரவு பெய்த மழைநீர் முழுவதும் செல்வதற்கு வழி இல்லாமல் காலி வீட்டுமனை நிலங்களில் தேங்கி கடல் போல் காட்சி அளித்தது. சாலையில் வெள்ளப்பெருக்கு ஓடியது. இதனால் பொதுமக்கள் நடந்துசெல்லமுடியாமலும், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, ஏஎஸ்டிசி நகர் செல்லும் சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. அன்னை சத்யா நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். காவல் துறை, 108 மற்றும் அவசர உதவிகள் அனைத்தையும் அணுகியும், எந்தவித உதவியும் செய்யவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நீர் வழிப்பாதையை சரி செய்யும் பணிகளை நேற்றுவரை மேற்கொள்ளவில்லை. சத்யாநகர் அருகே உள்ள பெட்ரோல் பங்க், தனியார் பள்ளியையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்குச் செல்லும் பெண்கள், அரசு ஊழியர்கள் பிடமனேரி வழியாக தர்மபுரி நகருக்கு செல்கின்றனர். இதுகுறித்து சத்யாநகர் மாதேஷ் (33), கிருஷ்ணன் (50) ஆகியோர் கூறுகையில், தர்மபுரி சத்யாநகர் முன் பென்னாகரம் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. இந்த சாலை விரிவாக்கப்பணியின் போது கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் கால்வாயில் மழைநீர் செல்லாமல் சாலையிலும், காலிநிலத்திலும் தேங்கியது. கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையால் சத்யாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. விஷ பாம்பு, தேள் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதிப்பட்டோம். எனவே விரிவாக்கப்பணிக்காக தோண்டிய கழிவுநீர் பாதையை சீர் செய்ய வேண்டும்.   பல கோடி ரூபாய் செலவு செய்து ஏரிகளில் குளங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அவைகளுக்கு வரும் நீர் வழிப்பாதைகளை முதலில் சரிசெய்ய வேண்டும். மழை நீர் சேகரிக்கும் திட்டங்கள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே உள்ளது என்றனர்.

Tags : houses ,district ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...