×

மக்களுக்கு இடையூறு இல்லாமல் பிளக்ஸ் பிரிண்டிங் தொழில்நடத்த அனுமதிக்க வேண்டும் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

திருச்சி, செப்.24: மக்களுக்கு இடையூறு இல்லாமல் பிளக்ஸ் பிரிண்டிங் தொழிலை நடத்த நடவடிக்கை எடுக்க கோாி பிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில், திருச்சி மாவட்ட பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ராஜாகாவேரி மணியன் மற்றும் சாரம் கட்டும் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சிவராசுவிடம் நேற்று மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருச்சி மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனங்கள் உள்ளன. 20 வருடமாக பிளக்ஸ் பிரிண்டிங் தொழிலை செய்து வருகிறோம். ஒவ்வொரு பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்திலும் கீழ் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் பொதுமக்களிடம் எளிதாக சென்று சேர பிளக்ஸ் பேனர்கள் பெரும்பங்காற்றி வருகிறது. மக்களுக்கு பயனுள்ளதாக இந்த பிளக்ஸ் விளம்பரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டாக தொடரப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் பிளக்ஸ் தொழில் செய்வதில் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றம் இதுவரை எந்த தீர்ப்பும் வழங்கவில்லை. தனி நபர்கள் செய்யும் தவறுகளுக்கு அல்லது விதிமீறல்களுக்கு பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனங்கள் எவ்விதத்திலும் நேரடி தொடர்புடையவை அல்ல. அரசு மற்றும் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகள் விதிமுறைகளை பின்பற்றி இத்தொழிலை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும் சமீபகாலமாக அரசு, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் விதிக்கும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மிகவம் கடினமாக இருப்பதால் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து சுய வேலைவாய்ப்பின் மூலம் தொழில் நடத்தி வரும் நாங்களும் எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தொழிலை முடக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் எளிதாக நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.


Tags : Owners ,Association ,
× RELATED இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம்...