×

ராசிபுரத்தில் ₹15க்கு சில்லி சிக்கன் விற்பனை அதிகாரிகள் அதிரடி சோதனை

ராசிபுரம், செப்.24: ராசிபுரத்தில், 100 கிராம் சில்லி சிக்கன் ₹15க்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் வியாபாரிகள் கடையை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வந்தது. முழுக்க முழுக்க கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர்கள், அதன் மூலம் கிடைக்க கூடிய பாலை கொண்டு நெய் உள்ளிட்ட மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை உற்பத்தி செய்து ஒரு காலத்தில் வருவாய் ஈட்டி வந்தனர். நாளடைவில் ராசிபுரம் பகுதியில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், மக்கள் நெருக்கமும் பல மடங்கானது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் ராசிபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளதால் உணவு தேவை நாளுக்கு நாள் அதிகரித்தது. வார இறுதி நாட்களில் ராசிபுரத்தில் இறைச்சி விற்பனை களை கட்டும். இதனை பயன்படுத்திக்கொண்டு சிலர் செத்த கோழி இறைச்சிகளை விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் சாலை, புதுப்பாளையம், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் சில்லி சிக்கன் கடைகளில் கடந்த சில மாதங்களாக 100 கிராம் சில்லி சிக்கன் ₹15க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த கடைகளுக்கு கோயும்புத்தூரில் இருந்து கிலோ ₹20க்கு பச்சை கறி கொண்டு வந்து சப்ளை செய்யப்படுகிறது. அதனை சில்லி சிக்கன் கடைகளில் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து 100 கிராம் 15க்கு கொடுக்கின்றனர். ஆகமொத்தம் பச்சை கறியை ₹20க்கு வாங்கி ஒரு கிலோ சில்லி சிக்கனை ₹150க்கு விற்பனை செய்து வருவாய் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்றிரவு ராசிபுரத்தில் செயல்பட்டு வரும் சில்லி சிக்கன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புகாருக்குள்ளான கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில்லி சிக்கனை சோதனை செய்வதற்காக மாதிரி எடுத்துக்கொண்டனர். அதே வேளையில் அதிகாரிகளின் சோதனை குறித்து தகவல் அறிந்ததும் ஒருசில வியாபாரிகள் கடையை மூடிவிட்டு ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், செத்த கோழிகளை சில்லி சிக்கனாக்கி விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், பண்ணைகளில் உள்ள வயதான முட்டை கோழிகளையும் கொன்று தோல் உறித்து, கறிக்கோழி இறைச்சியுடன் கலந்து சில்லி சிக்கனுக்கு தயார்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், கடைகளில் சோதனை நடத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில்லி சிக்கனை சோதித்து பார்த்தோம். அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான சுவையுடன் சில்லி சிக்கன் இருந்தது. ஆனாலும், சந்தேகத்திற்கிடமான கடைகளில் சேகரிக்கப்பட்ட சில்லி சிக்கனை மாதிரிக்காக எடுத்துள்ளோம். இதுகுறித்த அறிக்கை வந்த பின்னரே சில்லி சிக்கனுக்காக பயன்படுத்தப்பட்ட கோழி இறைச்சியின் தரம் குறித்து தெரிய வரும் என்றனர்.

Tags : Chili Chicken Sales Officers ,
× RELATED சிறப்பு ஒதுக்கீட்டில் 12 மாணவர் சேர்க்கை