×

மைனாரிட்டி சாதியினரை மிரட்டி வாக்குசேகரித்தால் கடும் நடவடிக்கை

விழுப்புரம், செப். 24: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைனாரிட்டி சாதியினரை மிரட்டி வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அவ்வாறு வாக்குசேகரிக்கும் இடத்திற்கு விரைந்துசென்று பறக்கும்படையினர் அவர்களை பிடித்துகாவல்நிலையத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே மாவட்டம் முழுவதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதாக ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டம்  முழுவதும் 39 பறக்கும்படை, 39 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆட்சியர் சுப்ரமணியன் பேசுகையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கிவிட்டது. இந்த மாதம் 30ம் தேதி கடைசியாகும். 1ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 3ம் தேதி வாபஸ் பெறுவதற்கு கடைசியாகும். அன்று மாலை
இறுதிவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 39 பறக்கும்படை, 39 நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் கூடுதலாக இரண்டு பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள். 8 மணி நேரம் என ஷிப்ட் முறையில் தாசில்தார், சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 3  போலீசார் ஒரு டீமில் இருப்பார்கள். தேர்தலையொட்டி அரசியல்கட்சிகள் மறைமுகமாக வாக்காளர்களுக்கு செலவுசெய்தல், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுப்பதில் முக்கிய பணியாற்ற வேண்டும். பணம் கொண்டு செல்வது, மதுபாட்டில் கடத்தலை தடுப்பது மட்டும் உங்களின் பணி
கிடையாது. தொகுதியில் எங்காவது பிரச்னை ஏற்பட்டால் விரைந்து சென்று தடுக்கவும், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் அளிக்கவும் வேண்டும். அதே போல் மைனாரிட்டி சாதியினரை மிரட்டி வாக்கு கேட்பவர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களில் பிடித்து கொடுக்க வேண்டும்.ஓட்டுக்கு பணம் கொடுத்தால் உடனடியாக பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவேண்டும். பாரபட்சமின்றியும், அரசியல் சாயமின்றி பணியாற்ற வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன்,  கூடுதல் எஸ்பி சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை