×

தேர்வு கட்டண உயர்வு கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - மறியல்

திருவண்ணாமலை, செப்.19: தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, செய்யாறு அரசு கலை கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் கருப்பு துணியால் கண்களை கட்டி மாணவர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சமீபத்தில் தேர்வு கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியது. மேலும், மதிப்பெண் பட்டியல் கட்டணத்தையும் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி, தொடர்ந்து 3வது நாளாக திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், மாணவர்கள், கருப்பு துணியால் கண்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்வு கட்டண உயர்வும், 5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதும் மாணவர்களின் கல்விக் கண்களை இருளாக்கும் என்பதை உணர்த்துவதற்காக இந்த நூதன எதிர்ப்பில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு, மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து கலைந்து சென்றனர். மேலும், திருவள்ளுவர் பல்கலைக் கழகம் தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல் செய்யாறு அரசு கலை கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்தனர். நேற்று மதியம் 12 மணியளவில் கல்லூரி எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம், வகுப்புகளுக்கு செல்ல மாட்டோம் எனக்கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரை மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிகொண்டா: இதே கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.இதுபோல் அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...