ஆந்திராவில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு கடத்தல் 1 கோடி மதிப்பிலான எரிசாராயம், டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல்

* மத்திய புலனாய்வு போலீசார் அதிரடி * தப்பியோடிய 4 பேருக்கு வலை


ஆரணி, செப்.19: ஆரணி அருகே 1 கோடி மதிப்புள்ள எரிசாராயம், டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்களை மத்திய புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிக்கு ஆரணி வழியாக டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் கோட்டம், மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகிரி, ஜெகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த நெசவு கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது, டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிசாராயத்தை, சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி கொண்டிருந்த 4 பேர் கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார், டேங்கர் லாரியை சோதனையிட்டதில் அதில் இருந்த 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை 500 கேன்களில் நிரப்பி, அதனை லாரி மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, டேங்கர் லாரி, சரக்கு லாரி, 3 லோடு ஆட்டோக்கள், 4 பைக்குகள் மற்றும் எரிசாராயம் நிரப்பப்பட்ட கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 1 கோடி ஆகும்.

இதுகுறித்து மத்திய புலனாய்வு போலீசார், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி பழனி, இன்ஸ்பெக்டர்கள் பிரேமா(போளூர்), மங்கையர்கரசி('செய்யாறு) ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதேபோல், ஆரணி டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், டேங்கர் லாரி, சரக்கு லாரி, 3 லோடு ஆட்டோ மற்றும் 4 பைக்குகள், போளூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ேவலூர், ஆற்காடு, ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிக்கு எரிசாராயத்தை கடத்தியது தெரியவந்தது. செக்போஸ்ட்டில் சிக்காமல் இருக்க, இந்த வழியை கடத்தல் கும்பல் நீண்டநாட்களாக பயன்படுத்தி வந்துள்ளது.மேலும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க டேங்கர் லாரியில் கொண்டுவரப்படும் எரிசாராயத்தை கேன்களில் நிரப்ப ஒரே இடத்தை பயன்படுத்தாமல், அடிக்கடி வெவ்வேறு இடத்தை மாற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு செஞ்சி, சேத்துப்பட்டு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதாக கடத்தல் கும்பலுக்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது.

எனவே, ஆரணி அடுத்த நெசவு கிராமத்தில் உள்ள மறைவான இடத்தில் டேங்கர் லாரியில் இருந்து எரிசாராயத்தை கேன்களில் நிரப்பி சரக்கு லாரியில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், தப்பி சென்ற 4 பேரை போலீசார் தேடி வருவதுடன், எரிசாராயம் கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட டேங்கர் லாரியில் கர்நாடக பதிவெண் இருந்தது. எனவே, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து எரிசாராயம் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் எரிசாராயம், டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Andhra Pradesh ,Villupuram District ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தனியார் பள்ளி,...