ஈரோடு, செப். 15: ஈரோடு சித்தோடு வெல்ல மண்டியில் உருண்டை மற்றும் அச்சு வெல்லத்தின் விலை சரிவடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் கரும்புகளை ஆலை உரிமையாளர்கள் டன் கணக்கில் கொள்முதல் செய்து, அதனை பாகாக்கி அச்சு மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். இதில் ஈரோடு, முள்ளாம்பரப்பு, கோபி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவை ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மண்டியில் சனிக்கிழமை தோறும் ஏலம் விடப்படும். இந்த வெல்ல மண்டிக்கு 30 கிலோ மூட்டை வெல்லம் வரத்தாகும். இங்கு வரத்தாகும் அச்சுவெல்லம், நாட்டு சர்க்கரை 90சதவீதம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள் ஏலத்தில் வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால், விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை இருந்தும் கடந்த சில வாரங்களாக அம்மாநில வியாபாரிகள் மழையின் காரணமாக வராததால் விற்பனை சரிந்தது. இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் சிப்பத்திற்கு ரூ.50 முதல் ரூ.80 வரை சரிவடைந்தது. இதனால் ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்தனர். இதுகுறித்து வெல்ல மண்டி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) நாட்டு சர்க்கரை 2ஆயிரம் மூட்டையும், அச்சுவெல்லம் ஆயிரம் மூட்டையும், உருண்டை வெல்லம் 5ஆயிரம் மூட்டையும் வரத்தானது. நாட்டுச்சர்க்கரை மூட்டை (30கிலோ) ரூ.850 முதல் ரூ.1,200 வரையும், அச்சு வெல்லம் ரூ.ஆயிரம் முதல் ரூ.1,180 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,050 முதல் ரூ.1,130 வரையும் ஏலம் போனது. இதில் அச்சுவெல்லம் விலை கடந்த மாதத்தை காட்டிலும் மூட்டைக்கு ரூ.80 வரையும், உருண்டை வெல்லம் ரூ.50க்கு மேல் குறைந்தது. நாட்டுச்சர்க்கரை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
மகாராஷ்டிராவில் அதிகமாக வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவை உற்பத்தி செய்வதாலும், அங்கு தொழிலாளர் கூலி குறைவு, கரும்பு விலை குறைவால், அவர்கள் விலையை குறைத்து விற்கின்றனர். இதனால், பிற மாநிலங்களுக்கு இங்கு தயாரிக்கும் வெல்லங்கள் செல்வது குறைந்துள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்தில் தீபாவளி வருவதால் இனி வரக்கூடிய வாரங்களில் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.