குலசேகரத்தில் மோசமான சாலையில் வழுக்கி விழுந்து 2 பெண்கள் காயம் அதிகாரிகள் மீது போலீசில் புகார்

குலசேகரம், செப்.11:  களியல் - அழகியபாண்டிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு  குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சுருளோடு  முதல் பொன்மனை வரை சாலை மோசமாக சீரழிந்து காணப்படுகிறது.இதனால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் போராட்டங்கள் நடத்தும் நிலை ஏற்பட்டது.  தற்போது குலசேகரம் முதல் களியல் வரை குழாய் பதிக்கும் பணிகள்   நடைபெற்று வருகிறது. மழைகாலத்தில் சாலை சகதியாகவும், வெயில் நேரத்தில்  புழுதி பறப்பதாலும் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையுள்ளது.இந்த நிலையில் கடந்த 24ம் தேதி குலசேகரம் ஆரணிவிளை பகுதியை சேர்ந்த கவுரி( 69) என்ற பெண் குலசேகரத்திலுள்ள சர்ச் திருவிழாவுக்கு  சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோசமான சாலையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தார்.  மார்த்தாண்டத்திலுள்ள தனியார்  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில்  உள்ளார்.

இதற்கு ₹80 ஆயிரம் செலவாகியுள்ளது. இது ஏழ்மை நிலையில் உள்ள கவுரியின் குடும்பத்திற்கு பண கஷ்டத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு காரணமான குடிநீர்  வடிகால் வாரியம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  குலசேகரம் காவல்நிலையத்தில் கவுரியின் மகன் ராபின்சன் புகார்  கொடுத்துள்ளார்.இதேபோன்று குலசேகரம் நாககோடு பகுதியை சேர்ந்த தனியார் நிதி  நிறுவன பெண் ஊழியர் பைக்கில் செல்லும்போது எதிரே சகதியான சாலையில் வேகமாக  வந்த வாகனத்திற்கு வழிவிடும்போது விழுந்ததில்  படுகாயமடைந்துள்ளார். இதேபோன்று தினமும் குடிநீர் வடிகால் வாரியம்,  நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின்  செயல்பாடுகளால் விபத்துகள்  நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Related Stories: