×

திருப்பத்தூரில் போலீசார் அசத்தல் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை வாகன ஓட்டிகள் வியப்பு

திருப்பத்தூர், செப்.11: திருப்பத்தூர் பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி மரியாதை செய்ததால் வாகன ஓட்டிகள் வியப்படைந்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் மற்றும் போலீசார் நேற்று மாலை திருப்பத்தூர் பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஆகிய பகுதிகளில் திடீரெ 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து வருவதைப் பார்த்த டிஎஸ்பி அவர்களுக்கு சால்வை அணிவித்து சாலையிலேயே மரியாதை செலுத்தினார். அப்போது, நீங்கள் தங்கள் உயிரை பாதுகாக்க ஹெல்மெட் அணிந்து வருவதால் உங்களுக்கு நாங்கள் மரியாதை செய்கிறோம் என்றார். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து டிஎஸ்பி தங்கவேலு கூறுகையில், ‘ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாமல் பலர் விபத்தில் சிக்கி பலியாகின்றனர். அதனை தடுக்கும் வகையில் நாங்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் நடத்தி வருகிறோம். இன்றைக்கு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாலையிலேயே காவல் துறையின் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறி பாராட்டினோம். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாராட்டு நிகழ்ச்சியானது தொடர்ந்து திருப்பத்தூர் பகுதியில் நடைபெறும் என்றார். திடீரென போலீசார் சால்வை அணிவித்தது வாகன ஓட்டிகளிடையே வியப்பை ஏற்படுத்தியது.

Tags : Motorists ,Tirupathur ,
× RELATED வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்.:வாகன ஓட்டிகள் தவிப்பு