×

மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கோடை விடுமுறையின் போதே, மாவட்டம் வாரியாக நடப்பு ஆண்டுக்கான, பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. விடுமுறைக்கு பின், பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு இலவச பாட புத்தங்கள் வழங்கப்பட்டது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு ஆங்கில வழி பாட புத்தகங்கள், பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாததால், மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஒருசில உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சில பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடு உள்ள பாடப்புத்தகம் வந்துவிட்டது. இன்று அல்லது நாளை வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தர்மபுரி முதன்மை கல்வித்துறை அலுவலர் ராமசாமி கூறுகையில், ஒருசில அரசு பள்ளிகளில் எதிர்பார்த்ததை காட்டிலும், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி படித்த மாணவர் பலரும், அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், வசிப்பிட மாற்றம் காரணமாக பல மாணவர்கள் புதிய வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், அதிக பாட புத்தகங்கள் தேவை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான பாட புத்தகங்கள் வந்த நிலையில், கூடுதலான பாட புத்தகங்கள் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பிற்கு மட்டுமே அனைத்து புத்தகம் வரவேண்டியது உள்ளது. அரசு பாடப்புத்தகம் தட்டுப்பாடு கிடையாது. தேவையான அளவிற்கு இருப்பு உள்ளது. எந்த அரசு பள்ளிக்கு பாடப்புத்தக தேவை என்றால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : government schools ,district ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...