×

பட்டிவீரன்பட்டி அருகே காட்சி பொருளாக இருக்கும் தீ தடுப்பு கோபுரம் கூடுதல் வனப்பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

பட்டிவீரன்பட்டி, ஜூன் 13: பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை மலைப்பகுதி உள்ளது. இம்மலைப்பகுதி வத்தலக்குண்டு மற்றும் கன்னிவாடி வனக்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதியாகும். இம்மலைப் பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாறை மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பள்ளம், ஜெரோனியம் மற்றும் மேல்மலைப் பகுதிகளில் உள்ள பட்டா காடுகள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான காடுகளில் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி வனப்பகுதிகளில் உள்ள மரங்களும், செடி கொடிகளும் காய்ந்து போய் உள்ளன.வனப்பகுதிகளுக்குள் செல்லும் சிலர் தீ வைத்து விட்டு சென்றுவிடுகின்றனர். காய்ந்து போன மரம் செடிகளில் பிடிக்கும் தீ மெதுவாக பரவி காற்றின் வேகத்தில் காட்டுத் தீ யாக மாறி வனப்பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு விலை மதிக்க முடியாத மரங்களும், மூலிகைகளும் தீக்கு இரையாகி விடுகின்றன. வனப் பகுதிகளில் தீ வைப்பவர்களைக் கண்காணிப்பதற்காகவும், தீ பரவாமல் தடுப்பதற்காகவும் வனப்பகுதிகளில் வனத்துறை மூலமாக பல லட்சம் ரூபாய் செலவில் தீ தடுப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாறை மலைச்சாலையில் தூக்கிவைச்சான் கல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு கோபுரத்தில் பணியாளர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இங்கு உடைந்த பாட்டில்கள் சிதறிக் கிடப்பதை காணமுடிகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு கோபுரங்கள் பராமரிப்பின்றி இருப்பது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த தீ தடுப்பு கோபுரத்தில் கூடுதல் வனப்பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fire prevention tower ,forest workers ,object ,Pattiveeranppatti ,
× RELATED அரசு அருங்காட்சியகத்தில் பீரங்கி கல் குண்டு காட்சிக்கு வைப்பு