×

மாவட்டம் தேனி மாவட்டத்தை மிரட்டுகிறது ஒரு புறம் நிபா... மறுபுறம் டெங்கு

தேனி, ஜூன் 11: தேனி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவேன் என நிபா வைரஸ் மிரட்டுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மீண்டும் வந்து விடுவேன் என டெங்கு வைரசும் மிரட்டுகிறது. ஆனால் அரசிடம் இருந்தும், உள்ளாட்சிகளிடம் இருந்தும் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காமல் சுகாதாரத்துறை தவிக்கிறது. தேனி மாவட்டம் கேரள எல்லையில் உள்ளது. தவிர தேனி மாவட்டத்தில் வசிக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் கேரளாவிற்கு வேலைக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் கேரளாவில் எந்த ஒரு நோய்தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் தேனி மாவட்டத்திலும் எதிரொலிக்கும். எனவே, கேரளாவில் என்ன மாதிரியான சுகாதார சூழல் நிலவுகிறது என தேனி மாவட்ட சுகாதாரத்துறை மிகவும் உன்னிப்பாக கவனித்து செயல்படும். தற்போது நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப், கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை முகாமிட்டு, அங்கிருந்து இங்கு வரும் பயணிகளையும், இங்கிருந்து அங்கு செல்லும் பயணிகளையும் கண்காணித்து வருகின்றனர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‛நிபா வைரஸ் வார்டு’ தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் சாரல் பெய்ய தொடங்கி உள்ளது. இந்த சாரல் சீசனில் ‛டெங்கு’ வைரஸ்கள் பரவும் அபாயம் உள்ளது. தற்போது கொசு மருந்து தெளிப்பவர்கள், வீடு, வீடாக சென்று டெங்கு கொசு சோதனை செய்பவர்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கின்றனர். ஜூன் மாதம் தொடங்கினாலே இவர்களின் எண்ணிக்கை கூடுதலாக 50 சதவீதம் அதிகரிக்கப்படும். ஆனால், இதுவரை டெங்கு அறிகுறி இல்லாததால் அரசு இது பற்றி கவலைப்படாமல் இருக்கிறது. டெங்கு வந்த பின்னர் தடுப்பது சிரமம். எனவே, வராமல் தடுக்கவே ஆண்டுதோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் வழக்கமாக அதிகரிக்கப்படும் கூடுதல் பணியிடங்களை இந்த ஆண்டு வழங்காமல் அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மவுனம் சாதித்து வருகின்றன. கூடுதல் பணியிடங்களை அனுமதித்து வழங்கினால் டெங்கு வராமலேயே தடுத்து விடலாம் என சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அரசுக்கு தெரிவித்துள்ளது. இதுவரை அங்கிருந்து எந்த பதிலும் வராததால் என்ன செய்வது என்பது தெரியாமல் தேனி மாவட்ட சுகாதாரத்துறை தவித்து வருகிறது. அதேபோல் உள்ளாட்சி நிர்வாகங்களும் மெத்தனப்போக்கினை கடைபிடிக்கின்றன. எனவே, தற்போது இருக்கும் பணியாளர்கள் மூலமே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : district ,Theni Niba ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...