×

சித்தூர் அருகே மூடப்பட்ட அரசு பள்ளியை மீண்டும் திறக்கக்கோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

சித்தூர், ஜூன் 11: சித்தூர் அருகே மூடப்பட்ட அரசு பள்ளியை மீண்டும் திறக்கக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் மாவட்டம், கங்கவரம் மண்டலம், மேல்மாயி பஞ்சாயத்து, குன்லபல்லி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் போதிய மாணவ, மாணவிகள் இல்லை எனக்கூறி மாவட்ட கல்வித்துறை அதிகாரி பாண்டூரங்கன் அந்த பள்ளியை இழுத்து மூடிவிட்டார். இதனால் எங்கள் கிராமத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் படிக்க விரும்பினால் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேல்மாயி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எங்கள் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். நான்கு கிலோமீட்டர் தூரம் அனுப்பி தங்களை பிள்ளை படிக்க வைக்க போதிய அளவு எங்களிடம் வசதி இல்லை. இதுகுறித்து கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அப்போது அவர் 10 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் பள்ளிக்கூடம் திறக்க உத்தரவு இடுகிறேன் என்று தெரிவித்தார். தற்போது எங்கள் கிராமத்தில் 30 மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். எனவே உடனடியாக அரசு ஆரம்பப் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தோம். அவர் அடுத்த மாதம் திறக்க உத்தரவிடுகிறேன் தெரிவித்தார். ஆனால் 3 வருடங்கள் ஆகியும் இதுவரை எங்கள் கிராமத்தில் மூடப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார பள்ளி திறக்கவில்லை. எனவே கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வரும் 12ம் தேதிக்குள் இழுத்து மூடிய அரசு பள்ளியை திறக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து கலெக்டர் அலுவலகம் முன் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : demonstration ,office ,collector ,government school ,Chittor ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...