×

வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது அக்னி முடிந்த பிறகும் இந்தாண்டு அதிகபட்சமாக 2வது முறை * ராணிப்பேட்டையில் 108, திருவண்ணாமலையில் 105 டிகிரி பதிவானது * அனல் காற்று வீசியதால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

வேலூர், ஜூன் 1: அக்னி வெயில் முடிந்த பின்னரும் வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 2வது முறையாக நேற்று அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது. ராணிப்பேட்டையில் 108 டிகிரியும் திருவண்ணாமலையில் 105 டிகிரியும் வெப்பம் பதிவானது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதமே எச்சரித்து இருந்தது. அதற்கு ஏற்றார்போல் தமிழகத்தில் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்தே பல்வேறு நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் எப்போதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த மே 1ம் தேதி இந்தாண்டின் அதிகபட்சமாக 110.7 டிகிரி அதாவது 111 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்த நாட்களிலும் 108 டிகிரிக்கு மேல் தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கோடை மழையால் வெயில் அளவு படிப்படியாக குறைந்தது. 100 டிகிரிக்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று இந்த ஆண்டின் 2வது முறையாக உச்ச கட்டமாக 110.7 டிகிரி வெயில் அதாவது 111 டிகிரி வெயில் கொளுத்தியது. அக்னி வெயில் முடிந்த பின்னரும் திடீரென 110.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையொட்டி நேற்று காலை 9 மணியளவில் இருந்ேத உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. தரையில் கால் வைக்க முடியாத அளவுக்கு சுட்டெரித்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். அவர்கள் துணியால் போர்த்திக்கொண்டு சென்றனர். ரோடுகளில் கானல் நீராய் தெரிந்தது. வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார், இளநீர், நுங்கு விற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலுக்கு இதமாக ஏதாவது ஒரு குளிர்பானத்தை குடித்து சமாளித்தனர். பகல் முழுவதும்தான் வெயில் வாட்டி வதைக்கிறது என்றால் இரவிலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மக்களை அச்சுறுத்தும் இந்த கடும் வெயிலுக்கு கோடை மழைதான் ஆறுதலாக இருக்க முடியும். அதனால் கோடை மழை பொழியுமா? உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிர்ச்சி கிடைக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வெயில் அளவு 105.8 டிகிரி பதிவானது. காலை 10 மணிக்கே தொடங்கும் வெயிலின் பாதிப்பு மாலை 4 மணிவரை தொடர்ந்ததால், மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிபடுகின்றனர். நேற்று அதிகபட்ச வெப்பமும், அனல் காற்றும் வீசியதால் பகலில் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், கோடை வெயிலில் பாதிப்பை தவிர்க்க பள்ளிகள் திறக்கும் தேதியை நீட்டித்து அரசு நேற்று உத்தரவிட்டது. ஆனாலும், திருவண்ணாமலையில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் கடந்த ஒரு வாரமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, மாணவர்களின் நலனை கருதி அரசு வெளியிட்டுள்ள உத்தரவை, தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 108 டிகிரியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.2 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிப்பதால் தவிக்கும் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The post வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது அக்னி முடிந்த பிறகும் இந்தாண்டு அதிகபட்சமாக 2வது முறை * ராணிப்பேட்டையில் 108, திருவண்ணாமலையில் 105 டிகிரி பதிவானது * அனல் காற்று வீசியதால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ranipettai ,Tiruvannamalai ,Agni ,Ranipet ,
× RELATED அரசு கலை கல்லூரிகளில் பகுதி நேரமாக...