×

(வேலூர்) கிராம நிர்வாக உதவியாளருக்கு சரமாரி கத்தி வெட்டு போலீசார் விசாரணை கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில்

 

ஒடுகத்தூர், மே 31: ஒடுகத்தூரில் கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் கிராம நிர்வாக உதவியாளருக்கு சரமாரி கத்தி வெட்டு விழுந்தது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(35). அத்திக்குப்பம் ஊராட்சியில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஒடுகத்தூரில் நடந்த கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர், பஸ் நிலையத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கெங்கசாணிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவருடன் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த கண்ணதாசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதில், படுகாயம் அடைந்த கணேசன் அலறியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக உதவியாளர் கணேசனுக்கும், கண்ணதாசனுக்கும் இடையே முன்விரோதம் இருப்பதும், அதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post (வேலூர்) கிராம நிர்வாக உதவியாளருக்கு சரமாரி கத்தி வெட்டு போலீசார் விசாரணை கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Odugathur ,Ganesan ,Melarasampattu village ,Odukathur ,Vellore district ,Athikubpam Panchayat ,
× RELATED பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக...