×

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருகை இல்லை குமரியில் மூடப்பட்ட 8 அரசு மாணவ, மாணவியர் விடுதிகள்

நாகர்கோவில், ஜூன் 7: குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 20 விடுதிகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் பல விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளி விடுதிகளில் அரசு பள்ளி மாணவர் விடுதி மார்த்தாண்டத்தில் உள்ளது. அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி அழகப்பபுரத்தில் செயல்படுகிறது. நாகர்கோவிலில் அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி, குழித்துறை அரசு பள்ளி மாணவியர் விடுதி, கருங்கல் அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகியவையும் செயல்படுகிறது.
இரணியல் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தக்கலை அரசு பள்ளி மாணவியர் விடுதி, குலசேகரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, புதுக்கடை அரசு பள்ளி மாணவியர் விடுதி, கொல்லங்கோடு அரசு பள்ளி மாணவியர் விடுதி, பூதப்பாண்டி அரசு பள்ளி மாணவியர் விடுதி, குளச்சல் அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகிய ஏழு மாணவியர் விடுதிகள் மற்றும் பூட்டேற்றி அரசு பள்ளி மாணவர் விடுதி ஆகிய 8 விடுதிகள் தற்போது மாணவ மாணவியர் சேர்க்கை இன்மையால் மூடப்பட்டுள்ளன. மாணவியர் சேர்க்கை வரும் பட்சத்தில் விடுதி செயல்படும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் செயல்படுகின்றன. மாணவர்களுக்கு அரசு கல்லூரி மாணவர் விடுதி, அகஸ்தீஸ்வரம் (இருப்பு) பால்குளத்திலும், அரசு கல்லூரி மாணவர் விடுதி, ஆரல்வாய்மொழியிலும் செயல்படுகிறது. மேலும் நாகர்கோவிலில் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ்வரம், கோவளம், சுங்கான்கடை ஆகிய இடங்களில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியும், பால்குளத்தில் அரசு சிறுபான்மையினர் நலக்கல்லூரி மாணவியர் விடுதியும் செயல்படுகிறது.
 பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவியர்களும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கு உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
 தகுதியுடைய மாணவ மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர் காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ, இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்டவிடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.06.2019க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொருத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2019-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
 மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத்தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தெரிவித்துள்ளார்.
மதுரை - திண்டுக்கல் இடையே பயணிகள் ரயில் ரத்து
நாகர்கோவில், ஜூன் 7: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு:
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில் எண்: 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் மதுரை - திண்டுக்கல் இடையே வரும் 13, 20, 27ம் தேதிகள் வியாழக்கிழமைகள் தவிர்த்து ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண்: 56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல் - மதுரை இடையே வரும் 13, 20, 27 தேதிகள் தவிர்த்து ஜூன் 30 வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஜூன் 30ம் தேதி வரை 1 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
ரயில் எண்: 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்படுவது ஒரு மணி நேரம் தாமதமாக 12.45 மணிக்கு வரும் 18, 19 தேதிகளில் புறப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : student ,hotels ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...