×

விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி வேலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு

வேலூர், ஜூன் 5: வேலூரில் விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பஸ் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோட்டீஸ்வரி. இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெங்கடேசன் தனது சைக்கிளில் வேலூர் மார்க்கெட் வந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேலூர்- ஆரணி சாலையில் சாயிநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் வெங்கடேசன் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடசன் உடல் நசுங்கி பலியானார்.

இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் ₹45 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கோரி வெங்கடேசனின் மனைவி கோட்டீஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் வேலூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விபத்தால் இறந்த வெங்கடேசன் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ₹10 லட்சத்து 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் திருவண்ணாமலை மண்டலத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், 3 மாதங்கள் கடந்தும் நஷ்டஈடு வழங்காததால் இறந்த வெங்கடேசன் மனைவி கோட்டீஸ்வரி வேலூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ₹13 லட்சத்து 22 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் 3 மாதங்களில் நிவாரணம் வழங்குவதாக அரசு போக்குவரத்துக்கழகம் அளித்த உறுதிமொழியை காப்பாற்றாததால், மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய நிவாரணம் வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி வெற்றிச்செல்வி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 3 நாட்களில் உரிய நஷ்டஈட்டை வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பஸ் விடுவிக்கப்பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞர் பத்மநாபன் ஆஜரானார். இச்சம்பவத்தால் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : bus station ,victim ,State Transport Bus Jatti Vellore ,
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்