×

மன்னார்குடி உள்ளிக்கோட்டை கடைவீதியில் கஜா புயலால் சேதமடைந்த உயர்கோபுர மின்விளக்ைக சீரமைக்காத அவல நிலை

மன்னார்குடி, ஜூன் 4: மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கடைவீதியில் கஜா புயலால் சேதமடைந்த உயர் மின்விளக்கு கோபுரம் புயல் கடந்து 6 மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் அப்பகுதி தினம்தோறும் இருளில் மூழ்கி கிடப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்தில் கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி நள்ளிரவில் அடித்த கஜா புயல் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட் டது. மேலும் மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் பல கிராமங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை ஊராட்சியில் மெயின் ரோட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குட்பட்ட உள்ளிக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது.

இந்த உயர் மின்விளக்கு கோபுரத்தால் உள்ளிக்கோட்டை கடைவீதி மட்டும் அல்லாமல் அப்பகுதிக்கு தினம்தோறும் வந்து செல்லும் மகா தேவபட்டினம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிரமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்தாண்டு அடித்த கஜா புயலின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளிக்கோட்டை கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுர மின்விளக்கு கீழ்ப்பகுதியில் முறிந்து அருகில் உள்ள கட்டிடத்தின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த 6 மாத காலமாக அப்பகுதி தினம்தோறும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனை சீரமைத்து மீண்டும் உயர்கோபுர மின்விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென கிராமவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து மகாதேவபட்டினம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ சோழன் கூறுகையில், உள்ளிக்கோட்டை கடைவீதியில் நிறுவப்பட்டிருந்த உயர்கோபுர மின் விளக்கு கஜா புயலால் சேதமடைந்து விட்டது. இதனை சீரமைத்து தருமாறு உள்ளாட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மின் வாரிய அதிகாரிகளிடம் கூறிய போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தான் அதனை பராமரிக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம் கோபுரத்தை சீரமைத்து கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக கொடுப்போம் என கூறுகின்றனர். ஊராட்சி அதிகாரிகளோ இதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. மின்விளக்கு எரியாததால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது.
இதனை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு உயர் மின்விளக்கு கோபுரத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.  இதன் பின்னரும் மெத்தனப்போக்கு தொடர்ந்தால் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு செல்வதோடு போராட்டங்கள் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

Tags : locomotive bazaar ,Manikurdhi ,storm ,Kaja ,
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு